தமிழ்நாடு அரசுத் துறையில் 2,327 குரூப் 2, 2A பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஜுன் 19 முதல் இதற்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், செப்டம்பர் 19-ம் தேதி தேர்வு நடைபெறவிருக்கிறது. இருப்பினும், குரூப் 2, 2A-ல் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் TNPSC நிர்வாகம் அதிகபட்ச வயது வரம்பு அறிமுகப்படுத்தியிருப்பது தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், TNPSC குரூப் 2, 2A பணி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும், அரசு அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது அறிக்கையில், “தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு துணை வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், வனவர், பல்வேறு துறைகளுக்கான உதவியாளர்கள் என மொத்தம் 61 வகையான பணிகளில் காலியாக உள்ள 2,327 இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான குரூப் 2, 2A தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் பல பணிகளுக்கு இதுவரையில்லாத வகையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.