புதுச்சேரி கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். முன்னாள் ராணுவ வீரர். இவரின் மனைவி வசந்தா. இந்தத் தம்பதியினருக்கு ஷகிலா (43) என்ற மகளும் சிவக்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் சிவக்குமார் பிசியோதெரபிஸ்ட்டாக வேலை செய்து வந்தார். ஷகிலாவுக்கு திருமணமாகி குமார் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் குமார் தன்னுடைய தாத்தா செல்வராஜ் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்குச் சென்று வந்தார். இதனால் வசந்தா பெயரில் உள்ள வீட்டை பேரன் குமாரின் பெயருக்கு எழுதி வைக்க செல்வராஜ் முடிவு செய்தார். அதுதொடர்பாக செல்வராஜிக்கும் அவரின் மனைவி வசந்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 15.4.2017-ம் தேதி செல்வராஜ், அவரின் பேரன் குமார் அகியோர் கொலைசெய்யப்பட்டனர். இது தொடர்பாக புதுச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார், அவரின் அம்மா வசந்தா ஆகியோரைக் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களையும் துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி தமிழக எல்லைப்பகுதியான பாட்டனூர் காட்டில் சிவக்குமார் வீசியதாக புதுச்சேரி போலீஸார் குற்றம் சுமத்தினர். இந்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் சிவக்குமாருக்கு அயுள் தண்டனை விதித்து கடந்த 12.12.2019-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த வழக்கிலிருந்து வசந்தா விடுதலை செய்யப்பட்டார்.
ஆயுள் தண்டனையை எதிர்த்து சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ரமேஷ், சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கின் முதல் சாட்சியான சிவக்குமாரின் சகோதரி பிறழ் சாட்சியாக மாறியுள்ளார். மேலும் போலீஸ் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களிலும் குளறுபடிகள் உள்ளன என வாதிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்தார். இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிவக்குமார் மீதான குற்றச்சாட்டுகளை போலீஸார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. அதனால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.