கள்ளக்குறிச்சி விவகாரம்: `தொடர் வெளிநடப்பு, புறக்கணிப்பு..!' – சட்டசபையில் அதிமுக செய்வது சரியா?!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60- பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கடந்த 20-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரும் தொடங்கியது. முதல் நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நடத்த கூட்டத்தில் அ.தி.மு.க தரப்பில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும்’ என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், ‘பதவி விலகுங்கள் ஸ்டாலின்’ என்கிற பதாகையைக் கொண்டுவந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சபாநாயகர் அப்பாவு, ‘எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கப்படும்’ என விளக்கம் அளித்தார். ஆனால், அவற்றை அ.தி.மு.க-வினர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ச்சியாக அவர்கள் தர்ணா செய்தனர். இதையடுத்து அவர்களை வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் அ.தி.மு.க எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

எடப்பாடி பழனிசாமி

பிறகு பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், “எதிர்க்கட்சிகள் இன்றைக்கு விரும்பத்தகாத நிகழ்வை உருவாக்கியுள்ளன. நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து வாதாடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டுத் தான் அதனைச் செய்ய முடியும். கேள்வி நேரம் தான் முதல் பணி. கேள்வி நேரம் மிக முக்கியமானது. அதனால், சட்டத்தில் கேள்வி நேரத்தின் போது குற்றச்சாட்டுகள் கூறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் எதிர்க்கட்சி தலைவருக்குத் தெரியும். அப்படி இருந்தும் அவர் இப்படி நடந்து கொண்டது ஆச்சர்யமாக உள்ளது. கேள்வி நேரம் முடிந்த பின்பே விவாதங்கள் செய்ய வேண்டும். இதைச் சொல்வதைக் கேட்கக்கூட அவர்கள் தயாராகவில்லை. அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என வேண்டுமென்றே இப்படிச் செய்துள்ளார்கள். இது தவறு. சபையில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்ததற்காக இந்த மன்றம் வருந்துகிறது. தவிர்க்க முடியாத காரணத்தால்தான் சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டார்” என்றார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி நிகழ்வு குறித்துப் பேசுவதற்குச் சபாநாயகர் அப்பாவு அவகாசம் தர மறுத்துள்ளார். அரசாங்கம் மெத்தனமாக உள்ளது. தாமதமாகச் சிகிச்சைக்கு வந்ததால் மக்கள் இறந்ததாக அமைச்சர் கூறுகிறார். ஆனால் இந்த கள்ளச்சாராய சோக நிகழ்வுக்கு என்ன காரணம்.. அரசுதான் காரணம்” என்றார். இதையடுத்து நடந்த கூட்டத்தொடரில் அ.தி.மு.க பங்கேற்கவில்லை. மறுபக்கம் தி.மு.க-வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதும் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடரின் போது அ.தி.மு.க செய்து வருவது சரிதான என்கிற கேள்வி எழுகிறது.

குபேந்திரன்

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “அ.தி.மு.க அரசியல் செய்வதற்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் ஏன் சட்டப்பேரவைக்குச் சென்று ஜனநாயக கடமை ஆற்றவில்லை. தமிழகத்தில் போதைப்பொருள் அதிகமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்னை இருக்கிறது. இதை எப்படித் தடுக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. கள்ளச்சாராய மரணத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் தருவதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எடப்பாடி ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்கிறார். அதற்கு மாறாக நிவாரணம் கொடுக்கக் கூடாது என எடப்பாடி போராடுவதுதான் சரியாக இருக்கும். ஒரு அப்பாவி சாலையில் இறந்தால் அவருக்கு ரூ.3 லட்சம்கூட கிடைக்காது.

இந்த பணத்தைக்கூட விழிப்புணர்வு இல்லாமல் சிலர் வாங்காமல் இருப்பார்கள். ராணுவம், போலீஸ் என இதர அரசுத் துறைகளில் பணியாற்றி உயிரிழந்தால் அவர்களுக்குக் கிடைப்பது ரூ.5 லட்சத்துக்கும் கீழ்தான் இருக்கும். மீனவர்களைப் பிற நாட்டினர் சுட்டுக் கொன்றால் அவர்களுக்குக்கூட ரூ.3 லட்சம்தான் நிவாரணம் கிடைக்கும். ஆனால் கள்ளச்சாராயத்துக்கு இவ்வளவு பணம் என்பது எப்படிச் சரியாக இருக்கும். எனவே எதிர்க்கட்சிகள் இந்த மாதிரி விஷயத்தை முன்னெடுத்துப் போராட வேண்டும். திருவொற்றியூரில் போதை பழக்கத்தால் ஒரு இளைஞர், தனது தாய் மற்றும் தம்பியைக் கொலைசெய்து விடுகிறார். இதற்கெல்லாம் மது பழக்கம்தான் காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதை பழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை எதிர்க்கட்சிகள் கொடுக்க வேண்டும், நாட்டுக்கு நன்மை பயக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *