இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழையலாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels), முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2006-ல் தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், 2016 அமெரிக்கத் தேர்தலில் அவர் போட்டியிடும்போது இதைப்பற்றி வெளியில் கூறாமலிருக்க தனக்கு 1,30,000 டாலர் கொடுத்ததாகவும் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பின்னர், இதில் ட்ரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு அவர் பணம் கொடுத்திருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில், நடிகைக்கு அவர் பணம் கொடுத்தது சட்டப்படி தவறு இல்லை என்றாலும், தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் வகையில் அந்தச் செலவை சட்ட செலவுகள் என தேர்தலில் ஆவணங்களைத் தாக்கல்செய்தது பெடரல் பிரசார நிதிச் சட்டத்தை மீறிய செயல் என்று அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், நியூயார்க் நடுவர் மன்றம் ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளில் அவரைக் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது. இதன்மூலம், அமெரிக்காவில் குற்றச்செயலில் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க முன்னாள் அதிபரானார் ட்ரம்ப். மேலும், அமெரிக்காவில் பொய்யான வணிகப் பரிவர்த்தனை பதிவுகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறப்படும் நிலையில், தண்டனை விவரங்கள் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
இருப்பினும், ட்ரம்ப் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய டிரம்ப், “நான் மிகவும் அப்பாவி. இந்த நாட்டுக்காகவும், அரசியலமைப்புக்காகவும் நான் போராடுகிறேன். இங்கு என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர். இதுவொரு மோசமான விசாரணை. உண்மையான தீர்ப்பு நவம்பர் 5-ம் தேதி மக்கள் அளிப்பார்கள்” என்று கூறினார். இன்னொருபக்கம், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை வரவேற்ற அதிபர் ஜோ பைடன் தரப்பு, `சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை நியூயார்க் நீதிமன்றத்தில் நாங்கள் இன்று கண்டோம்’ என்று தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88