Tamil News Live Today: `அதிமுக-வின் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு” – சீமான்

`அதிமுக அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு” – சீமான்

சென்னையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதிமுக வின் கூட்டணி கட்சியான தேமுதிக இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

சீமான்

மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினிஅறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

“விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்று காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை ”என தெரிவித்தார். முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்த நிலையில் தேமுதிகவும் புறக்கணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

கடந்த ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்து வாக்குகள் பெற்றதாக திமுகவை குற்றம்சாட்டிய பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், `கள்ளக்குறிச்சி சம்பவம் திமுகவினரின் உதவியுடன் தான் நடப்பதாகவும் கூறுகிறார்கள். உண்மை நிலை என்ன என்பதை தெரிய விசாரணையில் தான் தெரியும் அப்போதுதான் அவர்களின் முகத்திரை கிளியும்’ என தெரிவித்தார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை:

18வது மக்களவையின் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார். புதிதாக பதவியேற்றிருக்கும் எம்.பி-களுக்கும், மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஓம் பிர்லா அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துகளை சொல்லி உரையை தொடங்கினார். மேலும் தனது உரையில், `முன்னபோதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பதை’ குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

“கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகின் மிகப்பெரிய தேர்தல்… ஜம்மு காஷ்மீரில் பல தசாப்த கால வாக்குப்பதிவுகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த 4 தசாப்தங்களாக, வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் காஷ்மீர் குறைந்த வாக்குப்பதிவைக் கண்டது. இந்தியாவின் எதிரிகள் அதை காஷ்மீரின் கருத்தாக, சர்வதேச மன்றங்களில் பிரசாரம் செய்தனர். ஆனால் இந்த முறை, காஷ்மீர் பள்ளத்தாக்கு அத்தகைய அனைத்து சக்திகளுக்கும் தகுந்த பதிலடி கொடுத்தது” என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் உபரி வெள்ளம் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய மரணங்கள்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக உண்ணாவிரத போராட்டம்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம்: குடியரசுத் தலைவர் இன்று உரையாற்றுகிறார்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். மோடி தலைமையில் என்.டி.ஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடக்கும் முதலாவது குடியரசுத் தலைவர் உரை என்பதால் இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

அத்வானி

பாஜக மூத்த தலைவரான எல்.கே அத்வானிக்கு, வயது மூப்பு காரணமாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவரின் உடல்நிலையை கணகாணித்து வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *