ஒரு முஸ்லிம் ஆண் மற்றும் இந்து பெண் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர். இவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின்படி, திருமணத்தைப் பதிவு செய்யத் திருமண அதிகாரிகள் முன் ஆஜராகும்போது, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை எதிர்த்த பெண்ணின் குடும்பத்தினர் இந்தத் திருமணம் நடந்தால் அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை எழுப்பினர். அதோடு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டுச் செல்வதற்கு முன்பு நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்தனர்.
இந்த வழக்கை நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா விசாரித்தார். `ஒரு முஸ்லிம் ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையேயான திருமணம், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்றிருந்தாலும், முஸ்லீம் சட்டத்தின் கீழ் ஒழுங்கற்ற திருமணமாகவே கருதப்படும்.
இஸ்லாமியச் சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் நபருக்கு உருவ வழிபாடு அல்லது நெருப்பை வழிபடும் பெண்ணுடன் திருமணம் செய்வது செல்லுபடியாகாது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்தத் திருமணம் இனி செல்லுபடியாகும் திருமணமாக இருக்காது. மேலும், அது முறையற்ற (ஃபாசித்) திருமணமாக இருக்கும்” என்று உயர் நீதிமன்றம் தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.