அப்போது, மக்களவையில் நீட் விவகாரத்தில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை (முக்கிய பிரச்னைமீது விவாதம் நடத்துவதற்காக அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான கோரிக்கை தீர்மானம்) அவையில் தாக்கல்செய்தார்.
அதைத் தொடர்ந்து அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நீட் விவகாரத்தை முக்கிய பிரச்னையாக நாங்கள் கருதுகிறோம் என்று இந்திய மாணவர்களுக்கு, எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பாக ஒரு கூட்டுச் செய்தியை வழங்கக் கோருகிறோம். இதை ஒரு முக்கியமான பிரச்னையாக நாங்கள் கருதுகிறோம். மேலும், நீட் தேர்வு குறித்து விவாதம் இன்று நடத்த வேண்டும்” என்றார்.
அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, “குடியரசுத் தலைவர் உரைமீதான விவாதத்தின்போது ஒத்திவைப்பு தீர்மானம், பூஜ்ஜிய நேர விவாதம் எடுத்துக்கொள்ளப்படாது. குடியரசுத் தலைவர் உரைமீதான விவாதத்தின்போது நீங்கள் (எதிர்க்கட்சிகள்) எந்தப் பிரச்னையையும் எழுப்பலாம். நீங்கள் எழுப்பும் பிரச்னைகளுக்குப் பதிலளிக்குமாறு அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.