`அகோரிகளை வைத்து எனக்கெதிராக சூனியம் செய்கிறார்கள்!' – `திகில்' கிளப்பும் டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாகக் காங்கிரஸ் வெற்றிபெற்றதில் முக்கிய பணியாற்றியவர் டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் வெற்றிக்குப் பின்னர் யார் முதல்வர் என்று இழுக்கப்பட்ட கேள்வியின் முடிவில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு ஒரே துணை முதல்வர் என்ற நிபந்தனையோடு துணை முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டார்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

அதற்குப் பின்னர், முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இருப்பினும், எந்தவொரு உட்கட்சிப் பூசலுமின்றி ஓராண்டை சித்தராமையா அரசு நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில், தனக்கெதிராகவும் சித்தராமையாவுக்கெதிராகவும் அரசியல் எதிரிகள் கேரளாவில் அகோரிகளை வைத்து சூனியம் செய்வதாக டி.கே.சிவக்குமார் தற்போது கூறியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய டி.கே.சிவக்குமார், “கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு அருகே ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் அகோரிகளால் யாகம் நடத்தப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வந்திருக்கிறது. எனக்கெதிராகவும், சித்தராமையாவுக்கெதிராவும், காங்கிரஸ் அரசை சீர்குலைப்பதற்காகவும் இந்த யாகம் நடக்கிறது. அவர்களுடைய இந்த யாகத்தின் முக்கிய நோக்கமே, எதிரிகளை அழிப்பதுதான். இவை, ராஜ கண்டக மற்றும் மரண மோகன ஸ்தம்பனா யாகங்கள் என்று கூறப்படுகிறது. அந்த யாகத்தில் கலந்துகொள்பவர்கள் இதுபற்றி தெரிவித்திருக்கின்றனர்.

டி.கே.சிவக்குமார்

இந்த யாகத்தில் அகோரிகள் மூலம் 21 சிவப்பு ஆடுகள், 3 எருமைகள், 21வெள்ளாடுகள் மற்றும் 5 பன்றிகள் பலியிடப்படுகின்றன. இதை யார் நடத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யட்டும், நான் நம்பும் சக்தி என்னைக் காக்கும்” என்று கூறினார். இருப்பினும் கடைசிவரை யார் இதைச் செய்கிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறவில்லை. அதேசமயம், நாளையோடு நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிவடைவதையடுத்து, ஜூன் 2-ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *