நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிப்பார் எனத் தகவல் வெளியான நிலையில், காலையில் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடி கட்சித் தலைவரும், கண்ணாஜ் தொகுதி எம்.பி-யுமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது, இந்த ஆட்சி நிலைக்காது என்ற கருத்தை வலியுறுத்தும் கவிதை ஒன்றைப் பாடி பேச்சைத் தொடங்கிய அகிலேஷ் யாதவ், “என்னை தேர்வு செய்த மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். 400 இடங்களை கைப்பற்றுவோம் என்றார்கள்.
ஆனால், 240 தொகுதிகளில் சுருங்கி, முதல் முறையாக தோற்கடிக்கப்பட்ட கட்சி ஆட்சியில் இருப்பது போலத் தோன்றுகிறது. இந்த அரசு நீடிக்காது என மக்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அணி தார்மீக வெற்றி பெற்றுள்ளது. ஏனென்றால் இந்தியா கூட்டணி இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது முழு இந்தியாவுக்கும் தெரியும். இனி நடக்கும் அனைத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் எனது கட்சி வெற்றிப்பெற்றாலும், EVM வாக்குப்பதிவு முறை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4, வகுப்புவாத அரசியலிலிருந்து நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கிறது.
மக்களை பிரிக்கும் அரசியல் தோற்கடிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கும் அரசியல் வென்றிருக்கிறது. இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாக ஆளும் அரசு பிம்பத்தை கட்டமைக்கிறது. ஆனால், தனிநபர் வருமானத்தில் நாம் எப்படி இருக்கிறோம், பசி குறியீடு, மக்களின் மகிழ்ச்சி குறியீடு போன்ற ஆய்வுகளில் நம் நிலை என்ன என்பது குறித்து ஏன் மறைக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட லட்சியங்களுக்காக நாடு இயங்காது. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைக்கொண்டுதான் இயங்கும்.
கடந்த 10 வருட பா.ஜ.க அரசின் சாதனை என்பது ஒரு போட்டித் தேர்வு மாஃபியா குழுவை உருவாக்கியதுதான். ஒரு இளைஞன் தேர்வுக்கு கடுமையாகத் தயாராகி, தேர்வுக்காக காத்திருந்தால், தேர்வுக்கு முதல்நாள் தேர்வுத் தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அனைத்து தேர்வுகளின் தாள்களும் கசிந்திருக்கின்றன. அமிர்த கால் இளைஞர்களின் நம்பிக்கையில் விஷம் கலந்துவிட்டது. மக்களின் நம்பிக்கையைக் கொல்லும் அரசால் நிகழ்காலத்தை மாற்றவோ அல்லது எதிர்காலத்தை சிறப்பாகவோ மாற்ற முடியாது.
இரட்டை இன்ஜின் அரசின் தோல்விக்கு மிக முக்கிய உதாரணம் உத்தரப்பிரதேசம். நாங்கள் ஏற்படுத்திய சாலையில் இப்போது படகுகள் ஓடுகின்றன. இது தான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணம். அயோத்தி கோயில் அமைந்திருக்கும் பைசாபாத் தொகுதியில் கூட எங்கள் கட்சிதான் வென்றது. ராமரின் முடிவும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. சமூக நீதியை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.