ஜூன் 4 – மக்கள் தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது. ‘அடுத்து யாருடைய ஆட்சி?’ என்று வெளியான ஆருடங்கள் எல்லாம் மாறிமாறி சுழன்று கொண்டிருக்கின்றன. ‘400 இடங்களில் ஜெயிப்போம்’ என்று புறப்பட்ட பி.ஜே.பி, தேர்தல் போனபோக்கில் அந்த எண்ணில் இப்போது அத்தனை உறுதியாக இல்லை. அதேபோல, இந்த முறையாவது ஆட்சிக்கு வருவோம் என்கிற உற்சாகம் எதிர்கட்சியினரிடமும் முழுமையாக இல்லை.
இந்த நிலையில், அவர்களைவிட மக்கள்தான் அதிகமாக பதற்றத்தில் ஆழ்ந்து விட்டனர். குறிப்பாக, முதலீட்டாளர்கள். ‘பங்குச் சந்தை மேலே போகுமா… கீழே இறங்குமா?’ என்கிற விவாதத்திலேயே மூழ்கிக் குழம்பிக் கிடக்கிறார்கள்.சாதாரணமாகவே நெகட்டிவ் விஷயங்கள் ஏதாவது நடந்தால், சந்தையானது கீழே இறங்க ஆரம்பித்துவிடும். அதிலும், தேர்தல் வெற்றி, தோல்வி பற்றிய பேச்சுகள் என்பதால் பலரும் பங்குகளை விற்க ஆரம்பிக்க, கடந்த ஐந்து நாள்களாக பங்குச் சந்தைத் தொடர்ந்து இறக்கத்தின் போக்கிலேயே இருக்கிறது.
‘பி.ஜே.பி அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும் தனிப்பெரும் மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்கும்’ என்றும், ‘பி.ஜே.பி 300 இடங்களில் ஜெயிக்கும்’ என்றும் இருவேறு எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றன பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள். ஒருவேளை, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில், சந்தை பெரிய சூறாவளியைச் சந்திக்கும் என்பதும் அந்த நிறுவனங்களின் கணிப்பாக இருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க… ‘எப்போதுமே, எதைக் கண்டுமே முதலீட்டாளர்கள் குழம்பக் கூடாது’ என்பதுதான் சந்தையில் தேர்ந்த நிபுணர்களின் கருத்து. குறிப்பாக, தேர்தல் முடிவுகளைப் பார்த்து பங்கு முதலீட்டாளர்கள் குழம்பக் கூடாது; குறுகிய காலத்துக்கு சந்தையை விட்டு விலகி நிற்க நினைக்கக்கூடாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்கு உலகமே இந்தியாவை நோக்கி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் கிடைக்காத வளர்ச்சி, இந்தியாவில் கிடைக்கும் நிலை இருக்கிறது. எனவே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான விஷயங்களை மனதில்கொண்டு சந்தையில் இருந்து ஒதுங்கி இருக்க நினைத்தால், இழப்பையே சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அறியவேண்டியது முக்கியம்.
பங்குச் சந்தையானது பொருளாதார வளர்ச்சியை நம்பியுள்ளது. பொருளாதார வளர்ச்சி, நாடாளும் ஆட்சியை ஓரளவு நம்பி இருந்தாலும், பல்வேறு காரணிகளையும் சார்ந்தே அது இருக்கிறது.
எத்தனையோ தேர்தல்கள் வந்து போயிருக்கின்றன. ஆட்சிகள் தடாலடியாக மாறியிருக்கின்றன. ஆனால், சந்தையானது நீண்ட காலத்தில் ஏற்றம் கண்டு கொண்டேதான் இருக்கிறது. எனவே, ‘தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், நான் முதலீட்டுக் களத்தில் தொடர்ந்து திடமாக இருப்பேன்’ என்கிற முடிவில் முதலீட்டாளர்கள் தீர்க்கமாக இருப்பதே சரியான முடிவாக இருக்கும்!
– ஆசிரியர்