காவல்துறையில் தொடக்க காலங்கள்:
அதன்பின்னர், 1998-ம் ஆண்டில் முதல்முறையாக ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது கனவை நனவாக்கினார். அதைத்தொடர்ந்து பயிற்சியை முடித்த அருண், 2002-ம் ஆண்டு வரை நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி கோட்டங்களில் உதவி காவல் கண்காளிப்பாளராகப் (ASP) பணியாற்றினார். அதன்பின்னர், பதவி உயர்வு பெற்று கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்தடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றினார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவில் திறம்பட செயலாற்றினார். அருணின் துரிதமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அவருக்கு பதிவு உயர்வை பெற்றுத்தந்தது. 2012-ல் திருச்சி சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிவந்த அருண் 2016-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராகப் பதவி உயர்வு பெற்றார்.
சென்னைக்கு அடியெடுத்து வைத்த அருண்:
தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி என தான் பணியாற்றிய தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அருண் திறமையாக செயல்பட்டதால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார் அருண். ஏற்கெனவே, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில்(CBCID) காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். இதையடுத்து, 2012-ல் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல்பிரிவு டி.ஐ.ஜியானார். அதன்பிறகு, சென்னை தெற்கு மண்டல சட்டம் – ஒழுங்கு காவல் இணை ஆணையராகவும் பணியாற்றினார். தொடர்ந்து, வட சென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையரானார். பின்னர், சென்னை காவல் கூடுதல் ஆணையராகவும், காவலர் பயிற்சி பள்ளியின் ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார்.
துறையில் சமீப கால வளர்ச்சி:
2021-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராக மீண்டும் பொறுப்பேற்ற அருண், அங்கு சட்டவிரோதமாக கொடிகட்டிப் பறந்த லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். தீவிர நடவடிக்கையின் மூலம் லாட்டரி ஏஜெண்டுகள் முதல் லாட்டரி முதலாளிகள் வரை ஒட்டுமொத்த கும்பலையும் கைதுசெய்து சிறையிலடைத்தார். தொடர்ந்து, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2023-ல் ஆவடி மாநகர காவல் ஆணையரானார். அதன்பின்னர், கடந்த ஆண்டு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பியாக பொறுப்பேற்றவர் மாநிலம் முழுவதும் பல்வேறு குற்றங்களையும் காவல்துறையினரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தார். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான ரெளடிகளை கைது செய்து சிறையிலடைத்தார்.