ஆனால், இப்படி `ரைட்-ஆஃப்’ செய்யப்பட்ட கடன்களில் எவ்வளவு கடன்களை இதுவரை மீட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால்தான் இதில் இருக்கும் பித்தாலட்டமே புரியும்.
2014 முதல் 2023 வரையிலான 9 ஆண்டுகளில் ரூ.14.56 லட்சம் கோடி கடன்கள் `ரைட்-ஆஃப்’ செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ரூ.7.40 லட்சம் கோடி கடன்கள் பெரிய கார்ப்பரேட்டுகளின் கடன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
`ரைட் ஆஃப்’ செய்யப்பட்ட ரூ.14.56 லட்சம் கோடி கடன்களில் ரூ.2.04 லட்சம் கோடி கடன்கள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக 2023 மார்ச் மாதம் மக்களவையில் அப்போதைய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராத் எழுத்து மூலம் கூறியிருக்கிறார். அப்படி எனில், மீதமுள்ள ரூ.12.5 லட்சம் கோடி கடனுடைய நிலை என்ன, அதை என்ன கணக்கில் சேர்ப்பது, அந்தக் கடன் இனிமேலும் வரும் என்று எப்படி நம்ப முடியும். திரும்ப வராது என்ற நிலைமையில் உள்ள இந்தக் கடனை தள்ளுபடி ஆனதாகத்தானே் சொல்ல முடியும்.
அதே போல, திவால் சட்டம் என்கிற நடைமுறையை அமல்படுத்தி பெரிய புரட்சி செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். திவால் சட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் கோடி அளவிலான கடன்களுக்கான வழக்குகள் நடக்கின்றன. இதில் சுமார் ரூ.3 லட்சம் கோடி என்ற அளவில்தான் கடன் மீட்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள கடன்களை எப்போது மீட்கப் போகிறார்கள்?
அதைவிட மோசமானது, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கதை விடுவதுதான். விஜய் மல்லையாவில் ஆரம்பித்து, மெகுல் சோக்ஸி, ஜதின் மேத்தா, நிரவ் மோடி, லலித் மோடி, சண்டேசரா பிரதர்ஸ் என ஒரு நீளமான பட்டியலே இருக்கிறது.
இவர்கள் அனைவருமே பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் நாட்டை விட்டு தப்பியோடி இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரையாவது நம் நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்திருக்கிறார்களா, இவர்கள் வங்கிகளிலிருந்து வாங்கி ஏமாற்றிய கடன்களை எவ்வளவு மீட்டிருக்கிறார்கள்? இவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் சொகுசாகத்தானே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
பா.ஜ.க அரசின் நாடகத்தை எல்லாம் பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் வெளிக்கொண்டு வர முயற்சித்தால், இவர்கள் எதைப் பற்றியும் பேச முடியாது. இவர்கள் பேச்சை சாமான்ய மக்கள் நம்பி ஏமாந்துவிடுகிறார்கள் என்று நினைப்பதைப் பார்க்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது” என்றார்.
தேர்தல் முடிவுகள் எப்படி வரப்போகிறது என்று பார்ப்போம்!