சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில், நலம் பேணும் துறைக்குத் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர். துறைக்குப் பொறுப்பான அமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வருவதற்குள் புதியவரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க அமைச்சரின் அடிப்பொடிகள் சிலர் முயன்றிருக்கிறார்கள். சில கோப்புகளின் விவரங்களோடு புதிய அதிகாரியை அவர்கள் தொடர்புகொள்ளவும், “இதையெல்லாம் என்கிட்ட கொண்டு வராதீங்க. நான் ரியாக்ட் பண்ணுறவிதமே வேற மாதிரி இருக்கும்” எனக் கடுகடுத்துவிட்டாராம் புதிய அதிகாரி.
“அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்டிப்புக்குப் பெயர்போனவர். ஏற்கெனவே ஒரு அமைச்சருடன் அவருக்கு எழுந்த தகராறில், அமைச்சரின் வண்டவாளங்களையெல்லாம் அவர் மேலிடத்துக்கு ரிப்போர்ட்டாக அளிக்க, அந்த அமைச்சரின் இலாகாவே மாறியது. ஆள் யாரெனத் தெரியாமல் விளையாடாதீர்கள்” என அடிப்பொடிகளை துறையின் சீனியர் அதிகாரிகள் எச்சரிக்க, “தொடக்கமே முட்டல் ஆகிவிட்டதே…” என நொந்துபோயிருக்கிறார்களாம் அடிப்பொடிகள்.