2023-ம் ஆண்டு நடந்த போராட்டம்
2023-ம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, தாமாகவே முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்தார். லூப் சாலையில் இருக்கும் மீன் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு இந்த வழக்கு தரப்பட்டது. இது குறித்து பேசிய டி.ராஜா, “இந்த மாணவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் இங்கு வந்து உட்கார்ந்துகொள்கிறார்கள், வேறு யாராலும் சாலையைப் பயன்படுத்த முடிவதில்லை. அவர்கள் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்புங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பில் சாலையோரத்தில் இருக்கும் மீன்கடைகள், தற்காலிக கூரை அமைப்புகள் ஆகியவை “ஆக்கிரமிப்புகள்” என்று குறிக்கப்பட்டிருந்தன. சட்டப்படி இவற்றை அகற்றவேண்டும் என்று தீர்ப்பு குறிப்பிட்டது. ஒழுங்கற்ற மீன் கடைகள், ஒழுங்கற்ற பார்க்கிங், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறு போன்றவையும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன.
“இந்த சாலையின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது. இங்கு இருப்பவர்கள் சும்மா ஒரு பாலித்தீன் தாளை விரித்து மீன்களை வைத்து மக்களைக் கவர்கிறார்கள். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பீக் ஹவர் காலகட்டத்தில் நெரிசலைக் குறைப்பதற்கான மாற்றாக இந்த சாலை கட்டப்பட்டது. இந்த நோக்கத்துக்கே இந்தக் கடைகள் அச்சுறுத்தலாக இருக்கின்றன” என்று தீர்ப்பில் கூறப்பட்டது. உடனடியாகக் கடைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இந்தப் பிரச்னையைப் பற்றிய ஓர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 12-ம் தேதி கடைகளை அகற்றும் வேலை தொடங்கியது. 55-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான மீனவர்களும் மீன் விற்பனை செய்யும் பெண்களும் இதற்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர். தங்களது எதிர்ப்பின் குறியீடாகப் படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டினர். மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. வாழ்வாதார இழப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
பிரச்னை நொச்சிக்குப்பத்தில் தொடங்கினாலும் அருகில் இருக்கும் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர்களும் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தின் தலைவர்களில் ஒருவரான ரஞ்சித் குமார், இது வியப்புக்குரிய விஷயமல்ல என்கிறார். “மீனவ கிராமங்களிலேயே நொச்சிக்குப்பம்தான் மிகப்பெரியது. அரசாங்கம் எங்களையே வெளியேற்றிவிட்டால் பட்டினப்பாக்கம் போன்ற கிராமங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றாகிவிடும். அதனால்தான் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மக்களும் போராட்டத்தில் சேர்ந்துகொண்டனர். எங்கள் கிராமத்தின் மக்கள்தொகை அதிகம். இங்கு ஏழாயிரம் பேர் இருக்கிறோம். பட்டினப்பாக்கத்தில் ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஏழாயிரம் பேரின் மீன் கடைகளையே அகற்றிவிட்டால் ஆயிரம் பேரை வெளியேற்றுவது எளிதுதானே” என்று விளக்குகிறார்.
அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது பெருநகர சென்னை மாநகராட்சி புதிய ஒரு மீன் சந்தை வளாகத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்தக் கட்டுமானத்தில் மீன் விற்க 384 கடைகள் இருக்கும் என்றும், கட்டடத்தின் மொத்த மதிப்பு சுமார் பத்து கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 13-ம் தேதியன்று சில கட்டுப்பாடுகளோடு மீன் விற்பனையைத் தொடர்வதற்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 17-ம் தேதியன்று சாலையின் மேற்குப் பகுதியில் மீன் கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கட்டுப்பாடு விதித்தனர். ஏப்ரல் 17-ம் தேதி போராட்டம் மீண்டும் தொடர்ந்தது. ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18-ம் தேதிகளில் விடிய விடிய போராட்டம் நடந்தது. பின்னர் ஏப்ரல் 19-ம் தேதி போராட்டம் கைவிடப்பட்டது.
எதனால் போராட்டம் கைவிடப்பட்டது என்பதை ரஞ்சித் குமார் விளக்குகிறார். “மீன் விற்பவர்களிடம் ஒரு உறுதி தரப்பட்டது. மீன் விற்பதற்காக ஒரு சந்தை கட்டப்படும் என்றும், கடற்கரையில் மீன் விற்கப்படுவதற்கான கட்டுமானங்கள் வரும் என்றும் சொல்லப்பட்டது” என்கிறார்.
போக்குவரத்து நெரிசல்தான் பிரச்னையைத் துவக்கிவைத்தது என்று ரஞ்சித் குமார் தெரிவிக்கிறார். இப்போதும் புதிய கட்டுப்பாடுகளால் பிரச்னை வருகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். “நீதிபதிகள் செல்வதற்கு இது ஒரு முக்கியமான வழியாக மாறிவிட்டது என்பதால், காலையயில் இரண்டு மணிநேரம் மட்டும் தேவைப்படுகிறது என்று முதலில் சொன்னார்கள். பிறகு முதன்மை சாலையில் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இந்த சாலை தேவைப்படுகிறது என்றார்கள்.
இதனால் மீன் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களின் வண்டியை நிறுத்த முடியாமல் போனது. ஒருவேளை அவர்கள் வண்டியை நிறுத்தினால்கூட அது லூப் சாலையில் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆகவே அரசாங்கம் இங்கு இருக்கும் மீன் கடைகளை அகற்ற முடிவெடுத்தது. இதனால் இந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தாமல் இருப்பதற்குக் காவல்துறையினரை நியமிக்கத் தொடங்கினார்கள். இந்தக் காரணத்தால் பைக்கிலும் கார்களிலும் மீன் வாங்க வருபவர்களில் பலர் இங்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். இப்போதுகூட இங்கு ஒரு காவல்துறை அதிகாரி நிற்கிறார் [கை காட்டுகிறார்…]. இது எங்களது வருமானத்தைப் பெரிய அளவில் குறைக்கிறது” என்று விளக்குகிறார்.