டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர், தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இருப்பினும், அடுத்தநாளே, அமலாக்கத்துறை இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது. அடுத்த நான்கு நாள்களில், இதே வழக்கில் சிபிஐ அவரைத் தனியாக கைதுசெய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான கெஜ்ரிவாலின் ஜாமீன் கோரிக்கை மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், `கெஜ்ரிவால் ஏற்கனவே 90 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதாலும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டது.