கப்பலூர் டோல்கேட்: பொங்கியெழுந்த திருமங்கலம் மக்கள்; ஸ்தம்பித்த நெடுஞ்சாலை – நடந்தது என்ன?!

கப்பலூர் டோல்கேட்டுக்கு எதிராக கொதி நிலைக்கு சென்ற திருமங்கலம் வட்டார மக்கள், கடந்த 10-ஆம் தேதி நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நாள் முழுக்க போக்குவரத்து ஸ்தம்பித்தது மட்டுமன்றி, டோல் பிளாசா நிர்வாகத்துக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 12 ஆண்டுகளுக்கு முன் திருமங்கலம் நகராட்சியின் நுழைவு வாயிலில் டோல்கேட் அமைத்ததை திருமங்கலம் பகுதி மக்கள் எதிர்த்தனர். உடனே, ‘உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது’ என்று சொன்ன டோல்பிளாசா நிர்வாகத்தினர், பின்பு கட்டணம் கேட்பதும், எதிர்த்துக் கேட்டால் போலீஸை வைத்து மிரட்டுவதும், போராட்டம் அறிவித்தவுடன் கண்டுகொள்ளாமல் விடுவதும், சில நாட்கள் கழித்து மீண்டும் கட்டணம் கேட்பதுமாக கடந்த 12 ஆண்டுகளாக இந்த டோல்கேட்டால் திருமங்கலம் மக்களுக்கு பெரும் துன்பம் ஏற்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் கட்டண பாக்கியை செலுத்த சொல்லி நோட்டீஸ் விட்டது மட்டுமின்றி, அரசு நகர் பேருந்துகளுக்கும் பல கோடி ரூபாய் கட்டண பாக்கியை கேட்டு நோட்டீஸ் விட்டதால், திருமங்கலம் மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். அதன் பின்பு பிரச்னை ஆறப்போடப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் நோட்டீஸ் விட்டதாலும், சில வாகனங்கள் கிராமச்சாலைகள் வழியாக செல்வதாகக்கூறி டோல்கேட்டுக்கு முன் உள்ள உச்சப்பட்டி கிராமம் வழியாக செல்லும் பொதுச்சாலையை அடைக்க முயற்சித்த சம்பவத்தாலும் கொந்தளித்து விட்டார்கள் மக்கள்.

கடந்த 10-ஆம் தேதி திருமங்கலம் மக்கள் திரண்டு வந்தபோது ‘வழக்கமான போராட்டம்தான், சிறிது நேரத்தில் கைதாகி சென்று விடுவார்கள்’ என்றுதான் டோல் பிளாசா நிர்வாகத்தினர் நினைத்தனர். ஆனால், திரண்ட கூட்டத்தை பார்த்து அவர்கள்தான் 10 கவுண்டர்களையும் மூடிவிட்டு எஸ்கேப்பானார்கள்.  இவர்களுடன் அத்தொகுதி எம்.எல்.ஏ  ஆர்.பி உதயகுமாரும் கட்சியினருடன் வந்து போராட்டத்தில் அமர்ந்துவிட்டார்.

முற்றுகைப் போராட்டம்

நம்மிடம் பேசிய போராட்டத்தில் கலந்துகொண்ட வாகன உரிமையாளர்கள், “திருமங்கலம் நகராட்சி எல்லையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் டோல்கேட் அமைக்கும்போதே, இங்கு அமைக்கக்கூடாது, விதிப்படி திருமங்கலத்திலிருந்து விருதுநகர் செல்லும் மேலக்கோட்டை விலக்கில்தான் அமைக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால், உள்ளூர் மக்களிடம் கட்டணம் வாங்க மாட்டோம் என்று அந்த நேரத்தில் கூறினார்கள். அதன் பின்பு தொடர்ந்து பிரச்னைதான். நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அடிக்கடி உள்ளூர் வாகனங்களை நிறுத்தி கட்டணம் கேட்பதும், பிரச்னை செய்தால் போலீஸில் புகார் கொடுப்பதுமாக அட்டகாசம் செய்தார்கள். இரண்டு ஆண்டுக்கு முன்பும் போராட்டம் நடத்தினோம்.

இப்போது கடந்த 2020 முதல் 2024 வரை கட்டண பாக்கியை செலுத்த வேண்டுமென்று ஒவ்வொரு வாகன உரிமையளருக்கும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, இனி உள்ளூர் வாகனங்கள் 50 சதவிகித சலுகையில் பாஸ் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றும் அறிவித்துள்ளார்கள். திருமங்கலத்தில் உள்ளவர்கள் வேலைக்காகவும், பல்வேறு பணிகளுக்காக மதுரைக்கும், அருகிலிருக்கும் விவசாய நிலங்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டிய நிலை உள்ளபோது இந்தக் கட்டணக்கொள்ளை எவ்வளவு பெரிய கொடுமை? அதனால்தான் தீவிர போராட்டத்தில் இறங்கிவிட்டோம்” என்றனர்.

கப்பலூர் சிட்கோ தொழிற்சாலை கூட்டமைப்பின் தலைவர் ரகுநாதராஜாவிடம் பேசியபோது, “இந்த பிரச்னை குறித்து மாவட்ட அமைச்சர், அனைத்துக் கட்சி நிர்வாகிகளிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இங்கு டோல்கேட் அமைத்திருப்பது விதி மீறல் என்று 2012-ல் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதே அப்போதைய கலெக்டர் உத்தரவு போட்டார்.

கப்பலூர் டோல்கேட்

அதனால், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு என்று சொன்னார்கள். ஆனால், தொடர்ந்து பிரச்னைதான். சிறுதொழில் நிறுவனங்களைக் கொண்ட சிட்கோ தொழிற்பேட்டைக்கு தினமும் வந்து செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கட்டணமின்றி சென்றுவர ஏற்கனவே கலெக்டர் அனுமதி அளித்திருந்தார். தற்போது அதிலும் பிரச்னை. தமிழக அரசு நினைத்தால் ஒரு உத்தரவில் இப்பிரச்சனையை தீர்த்துவிடலாம். வருகின்ற 15-ஆம் தேதிக்குப்பின் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்றார்.

“அதிமுக ஆட்சியில் அமைதியாக இருந்துவிட்டு இப்போது அரசியல் செய்வதாக விமர்சிக்கப்படுகிறதே..?” என்று போராட்ட களத்திலிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது, “அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது டோல்கேட்டை அகற்ற தொடர்ந்து முயற்சித்தோம். அதுவரை திருமங்கலம் பகுதி மக்களிடம் கட்டணம் வசூல் செய்யாத வகையில் பார்த்துக்கொண்டோம்.  அப்போது உள்ளூர் மக்களிடம் பிரச்னை செய்த டோல்கேட் ஊழியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவேன் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் கண்டுகொள்ளவில்லை. டோல்கேட்டுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யும் நிலைதான் உள்ளது. தற்போது உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவருக்கும் ரூ. 2 லட்சம் முதல்  ரூ. 12 லட்சம் வரை அபதாரம் செலுத்த சொல்லி, டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, இனி உள்ளூர்  வாகனங்கள் 50 சதவிகித கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் ஓரளவு வேலை வாய்ப்பைத் தரும் சிட்கோ தொழிற்பேட்டையிலுள்ள சிறு நிறுவனங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படும். கட்டண விலக்கு அளிக்க 2012-ல் கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டனர். ஆனால், டோல்கேட் நிர்வாகம் அதை சட்டை செய்யவில்லை. 60 கிலோமீட்டருக்குள் உள்ள டோல்கேட் அகற்றப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழக அரசு, அதுகுறித்து மத்திய அரசிடம் எடுத்துக்கூறி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். செய்யவில்லை. எங்களை பொறுத்தவரையில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்.” என்றார்.

காவல்துறையை வைத்து பேசிப்பார்த்தும் மக்களை அங்கிருந்து அகற்ற முடியாத நிலையில், போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தி, நெடுஞ்சாலை ஆணைய உயரதிகாரி கீர்த்தி பரத்வாஜ், காவல்துறை அதிகாரிகள், ‘உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பதாக’ வாய்மொழியாக கூறியதை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

‘ எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்’ என்று கூறியதால், அதுகுறித்து, 15-ஆம் தேதி கலெக்டர் முன்னிலையில் ஆலோசித்து இறுதித் தீர்வு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின்போது

திண்டுக்கல்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஒருநாள் ஸ்தம்பிக்க வைத்த திருமங்கலம் வட்டார மக்களின் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டாலும் இன்னும் கொந்தளிப்பு குறையாமல் உள்ளது. 15-ஆம் தேதி கூட்டத்துக்கு பிறகு இவர்களின் போராட்டம் தொடருமா என்பது தெரியவரும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *