கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் சுமார் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்தது.
மற்ற துறைமுகங்களில் இல்லாத பல விஷயங்கள் விழிஞ்ஞம் துறைமுகத்தில் உள்ளன. சர்வதேசக் கடல் பாதையில் இருந்து மிக அருகில் அதாவது, 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அமைந்துள்ளது இத்துறைமுகம். கடல் பாதைக்கு இவ்வளவு அருகில் நம் நாட்டில் வேறு துறைமுகங்கள் இல்லை என்கிறார்கள்.
மற்ற துறைமுகங்களை ஆழப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், விழிஞ்ஞம் துறைமுகம் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் வகையில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இனி மொத்தம் உள்ள 4 கட்ட பணிகளும் நிறைவடைந்தபிறகு ஆண்டுக்கு 30 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் வகையில் அமைய உள்ளது. அதன்பிறகு ஒரே சமயத்தில் 5 பெரிய மதர் ஷிப்புகள் துறைமுகத்துக்குள் வர முடியும்.
துறைமுகத்துக்குள் வரும் கப்பல்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். துறைமுகத்தில் இறக்கப்படும் கண்டெய்னர்களுக்கு கஸ்டம்ஸ் வரி செலுத்தவேண்டும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் வரும். விழிஞ்ஞம் துறைமுகம் மூலம் 5000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கண்டெய்னர் பிசினஸ், தொழில் துறை, உற்பத்தித் துறை, போக்குவரத்து, சுற்றுலா என கேரள மாநில வளர்ச்சிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டம் காரணமாக அமைய உள்ளது.