வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் கடந்த 11-ம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேகர் ரெட்டியின் வீட்டுக்கே சென்று உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். சேகர் ரெட்டிக்கும் ஆறுதல் கூறினார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் `ஜனநாயக’ முறைப்படி நடைபெறவில்லை. அதனால், அ.தி.மு.க போட்டியிடவில்லை.
அதிகாரப் பலம், பண பலத்தினால்தான் தி.மு.க வெற்றிப் பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்குத்தான் அதிகமான வாக்குகள் பதிவாகின.
காவிரி விவகாரத்தில், `ஒவ்வொரு ஆண்டும், கர்நாடக அணையில் இருந்து குறிப்பிட்ட அளவுக்குத் தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஆனால், அதைப்பற்றியெல்லாம் `இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க பேசுவது கிடையாது. தமிழ்நாடு விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத அரசாங்கம். தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் கவலைப்படாத ஓர் அரசாங்கம். அவர்களுக்குக் கூட்டணிதான் முக்கியம். அதிகாரம்தான் முக்கியம். இந்த `விடியா’ தி.மு.க முதலமைச்சர் எந்தக் குரலையுமே கொடுப்பதில்லை.
இன்று சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்பவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர். மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக அதிகாலையில் அவரை வேக வேகமாக அழைத்துச் சென்றது ஏன்?. கைவிலங்குப் போட்டு பாதுகாப்போடு சென்றிருக்க வேண்டும். ஏற்கெனவே, `உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று ஆம்ஸ்ட்ராங் உறவினர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொல்லி வந்த நிலையில், இந்த என்கவுன்ட்டர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது’’ என்றார்.