`பிரகாஷ் ராஜ் என்ன சாதித்துவிட்டார் என்று விசிக விருது கொடுக்கிறது?' – கடுகடுக்கும் தமிழிசை

தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை நேரில் சந்தித்துப் பேசினேன்…

“சாதாரண மனிதர்களைப்போல ‘பயலாஜிக்கலாக’ நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. என்னை பரமாத்மா அனுப்பி வைத்திருக்கிறார்” என்ற பிரதமரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?

“பிரதமர் கூறியதை நான் தவறு என நினைக்கவில்லை. அவருடைய நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் கூர்ந்து பார்த்தீர்கள் என்றால், அபரிமிதமான சக்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அபரிமிதமான பணி செய்யும்போது தனக்கு அபரிமிதமான பவர் இருக்கிறது என நம்புவதில் எந்த தவறும் இல்லை!”

மோடி

“ஆனால், ‘அதானி, அம்பானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியிருக்கிறார்’ என ராகுல் காந்தி கிண்டல் செய்கிறாரே?”

“அதானி, அம்பானி யாருடைய காலகட்டத்தில் வளர்ந்தார்கள்? 50 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். அதானிக்கு உதவுவதால் பிரதமர் என்ன பலன் அடையப்போகிறார்? அவருக்கு குடும்பம் இருக்கிறதா? 140 கோடி மக்கள்தான் குடும்பம் என தெரிவித்துவிட்டார். இவர்களெல்லாம் அரசியல் லாபத்துக்காக பேசிவருகிறார்கள்.”

கெளதம் அதானி, முகேஷ் அம்பானி!

“ஆனால், ‘அதானி நிறுவனம் தரம் குறைந்த நிலக்கரியை தமிழகத்துக்கு வழங்கி ஊழல் செய்துள்ளதாக’ எழுந்த குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க பதில் சொல்லவில்லையே?”

“விசாரணை இல்லாமல் எப்படி இருக்கும்? ஊழலுக்கு எந்த விதத்திலும் உறுதுணையாக இருப்பவர் பிரதமர் மோடி இல்லை. பா.ஜ.க ஊழலுக்கு எதிரான கட்சி!”

நிலக்கரி ஊழல்

“ஊழலுக்கு எதிரான கட்சி என்கிறீர்கள், ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி வளையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலர் இருக்கிறார்களே?”

“அதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த தேர்தலை நியாயமாக நடத்தி இருக்கிறோம். ஊழலுக்கு எதிரான கட்சி. எங்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது!”

சிக்கிய ரூ.4 கோடி

” ‘பிரதமர் கன்னியாகுமரியில் தியானம் செய்ய வருவதன் மூலம் மறைமுகமாக பிரசாரம் செய்கிறார்’ என்கிறாரே செல்வப்பெருந்தகை?”

“இதற்கு முன்பு இமயமலைக்கு சென்று தியானம் செய்தார். பிரதமர் தியானத்திற்கு வருகிறாரே என தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். விவேகானந்தர் இந்த பாறையின் மீது நின்று சக்தியின் மிகப்பெரிய ஆசீர்வாதம் பெற்றார். அவர் தமிழகத்தை சேர்ந்தவரா? அதுபோல பிரதமர் வருகிறார். எல்லாவற்றையும் அரசியல் ஆக்கக் கூடாது!”

பிரதமர் மோடி

” ‘தமிழக மக்களை திருடர்கள்’ என பிரதமர் சொல்வதாக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாரே?”

“இந்த விஷயத்தில் ஸ்டாலினை நான் கடுமையாக கண்டிக்கிறேன். திருடன் என்கிற வார்த்தையை தமிழர்கள் மீது சுமத்தியது ஸ்டாலின்தான். ஒடிசா முதல்வரிடம் பவர் இல்லை. அதிகாரத்தை வி.கே.பாண்டியன் வைத்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டும்விதமாக ‘ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று மறைமுகமாக சொல்லியிருந்தார் பிரதமர் மோடி. ஆனால், அவர் சொல்லாததை சொன்னதாக கூறினால், நீங்கள்தான் தமிழர்களை அவமதித்து இருக்கிறீர்கள்.”

மத்திய அமைச்சர் அமித் ஷா

“ஆனால், ‘ஒடிசாவில், தமிழர் ஆட்சிக்கு வரக் கூடாது’ என அமித் ஷா பேசியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒடிசாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி, வி.கே.பாண்டியன் என்ற ஒரு தனிப்பட்ட நபரால், நிலைகுலைந்து போய்க்கொண்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட பேசப்பட்ட வார்த்தை அது. அதே அமித் ஷா, ‘தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்’ என தெரிவித்தபோது பாராட்டினீர்களா?”

அண்ணாமலை

“பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்து வந்த அண்ணாமலை, தற்போது ‘கூடுதல் வாக்குகளை பெறுவதுதான் முக்கியம்’ என்கிறாரே?”

“அவருடைய கருத்து தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 10 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம் என்றால், மற்ற இடங்களில் பலவீனமாக இருக்கிறோம் என்கிற அர்த்தம் இல்லை. எனவே, ‘வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும்போது மக்களின் ஆதரவு நமக்கு கிடைத்துள்ளது என்பதை தெளிவுபடுத்தும்’ என்கிற அர்த்தத்தில்தான் பேசினார். திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் ஒரு தேசிய கட்சி அதிக வாக்குகளை பெரும் சூழல் உருவாகி இருக்கிறது.”

சீமான்

“ஆனால், ‘பா.ஜ.க வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியைக் கலைத்து விடுகிறேன்’ என்கிறாரே சீமான்?”

முதலில் சீமான் தனிமனித ஒழுக்கத்தைக்கூட பின்பற்றவில்லை. அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. கட்சியை கலைக்க விரும்புகிறார் என நினைக்கிறேன். அதற்கு எங்கள் பெயரை பயன்படுத்துகிறார்.”

ஜெயலலிதா

” ‘ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர்’ என அண்ணாமலை பேசியதற்கு, அவரை ‘சிறுமை புத்தியுடையவர்’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே ஜெயக்குமார்?”

“ஜெயலலிதா நிச்சயமாக தீவிர இந்து மத பற்றாளர். உச்ச நீதிமன்றம் இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறை என தெளிவாக சொல்கிறது. தானம் செய்ய வேண்டும், கோவிலுக்கு செல்ல வேண்டும், நேரம், காலம் பார்க்க வேண்டும் என்பதுதான் இந்துத்துவா. இதையெல்லாம் அவர் பின்பற்றினாரா…இல்லையா? ராமசேது, கரசேவைக்கு ஜெயலலிதா ஆதரவாக இருந்தாரா… இல்லையா? ஒரு நல்ல தன்மையை எடுத்து சொல்லும்போது அ.தி.மு.க சகோதரர்கள் ஏன் விமர்சனம் செய்கிறார்கள்? சொல்லக் கூடாததை சொல்லிவிட்டது போல பேசுகிறார்கள். நாகரிகமாக எதிர்வினையாற்ற வேண்டும். “

வானதி சீனிவாசன்

“அதிருப்தியின் காரணமாகவே அண்ணாமலை நடத்திய கூட்டத்திற்கு வானதி, நயினார், பொன்னார் வரவில்லை என்கிறார்களே?”

“அப்படியெல்லாம் இல்லை. பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏஜென்ட்டுகளை தேர்வு செய்யும் பணியில் இருந்தார். வானதி சீனிவாசன், நயினார் பிற மாநிலங்களில் பிரசாரத்தில் இருக்கிறார்கள்.”

நடிகர் பிரகாஷ் ராஜ்

“பிரதமர் மோடி சிறந்த நடிகர், அவர் தெய்வ மகன் இல்லை. டெஸ்ட்டியூப் பேபி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறாரே பிரகாஷ் ராஜ்?”

“பிரகாஷ் ராஜ் தனக்கு எம்.பி பதவி வேண்டும் என கேசிஆர்-ரிடம் மண்டியிட்டு இருந்தார். ‘என்னை கர்நாடகாக்காரன் என நினைக்க வேண்டாம். தெலுங்கு மக்களுக்காகப் போராடுகிறேன்’ என்றெல்லாம் பேசினார். வி.சி.க எதன் அடிப்படையில் விருது கொடுத்திருக்கிறார்கள்? அவர் என்ன சாதித்து விட்டார்? மோடியை எதிர்க்கிறார் என்பதற்காக விருது கொடுக்கிறீர்களா?” என்றார் காட்டமாக!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *