தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கினை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. `தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் 100வது நாளில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாகத் தெரிகிறது.
ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். அதற்கு போலீஸார் உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார்கள்’ என துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். மனுதாரரான ஹென்றி திபேன், “துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது என்பது குறித்து போலீஸார் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
மிக அருகில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகளை போலீஸார் பயன்படுத்தியுள்ளனர்.அந்த சம்பவம் நடந்த போது இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் சிபிஐ-யின் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படவில்லை” என வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், “துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது. சிபிஐ-யால் விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை.
இது சிபிஐ-யின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிபிஐ துணை போவதாகவே இந்த நீதிமன்றம் கருதுகிறது. பொது மக்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கியுள்ளனர். இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூட சிபிஐ விசாரிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 7 கி.மீ தூரம் உள்ள வீட்டில் எப்படி ஒருவர் பலியாகியிருக்க முடியும்? இதையெல்லாம் சிபிஐ ஏன் விசாரணைக்கு கொண்டு வரவில்லை” என கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், “சிபிஐ தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. மறு விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி சிபிஐ மீது குற்றம் சட்ட முடியும்?” என வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “விசாரணை முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் ஒருவர் பெயர் கூட சேர்க்கப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக சேர்க்கப்படாத நிலையில் யாருக்கு எதிராக வழக்கு நடத்துவீர்கள்?” என சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதிகள், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சொத்து விவரங்கள், சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கான சொத்து விவரங்களை சேகரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88