School leave | கனமழை எதிரொலி.. இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! – News18 தமிழ்

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால், பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக உதகை உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தொரப்பள்ளி, ஸ்ரீமதுரை, இருவயல், மேல் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பந்தலூரை அடுத்த செம்மண்வயல் பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களை மழைநீர் சூழ்ந்தன. கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின. உதகையில் இருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைச்சாலையில் ராட்சத மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

நாடுகாணியில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையிலும் மரம் விழுந்ததால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோன்று, உதகையில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையில், பொலீரோ வாகனத்தின் மீது அடுத்தடுத்து 5 மரங்கள் சாய்ந்ததில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாலையில் விழுந்துள்ள மரங்களை தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் எனவும், சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர் மழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *