`200 நாளில் 595 கொலைகள்; நடவடிக்கையில் இனியும் இருமாப்பு வேண்டாம்'- ஸ்டாலினுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சமீப கால அரசியல் தலைவர்கள் படுகொலைகள் உள்ளிட்ட கொலைச் சம்பவங்கள் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தின்மீது எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழ வழிவகுத்திருக்கின்றன. அந்த வரிசையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 200 நாள்களில் 595 கொலைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், இனியும் இருமாப்போடு இருக்காமல் மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

அந்த அறிக்கையில், `ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி’ என்று பாடினார் புரட்சித் தலைவர். ‘புரட்சித்தலைவரின் ரசிகன் நான் என்றும், அவரது படங்களைப் பார்த்தே வளர்ந்தவன் நான்’ என்றும் தேவைக்கேற்றார்போல், சந்தர்ப்பத்திற்கேற்றார்போல் சொல்லக்கூடிய இந்த விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்துக்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.

விடியா தி.மு.க ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதம் 53 கொலைகளும், ஏப்ரல் மாதம் 76 கொலைகளும், மே மாதம் 130 கொலைகளும், ஜூன் மாதம் 104 கொலைகளும், ஜூலை 17-ம் தேதி வரை 88 கொலைகளும் என மொத்தம் சுமார் 200 நாள்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின்

‘அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்’ என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் வலியுறுத்துகிறேன். கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல்துறையை தங்களின் சுயநலத்துக்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாகப் பயன்படுத்துவார்களேயானால், ‘அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்’ என்பதை நினைவூட்டுகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *