சைபர் கிரைம்களைத் தடுப்பதற்காக, இந்தப் புதியச் சட்டத்திருத்தம் மேலும் பல புதிய விதிகளை வகுத்துள்ளது. ஒருவரின் முறையான அனுமதியின்றி, அவரின் அடையாள ஆவணங்களை வைத்து சிம் கார்டுகள் பெறுவது கண்டறியப்பட்டால், சிம் கார்டு பெற்ற நபருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது ஐம்பது லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டுமே விதிக்கப்படலாம். மேலும், ஏதேனும் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களுக்கு வணிகச் செய்திகளை அனுப்பினால், அந்த நிறுவனத்தின் மீது இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும், அந்த நிறுவனம் தன் சேவைகளை வழங்கும் வாய்ப்பையும் இழக்கக்கூடும்.
ஒரு தனிநபர் அதிகபட்சமாக ஒன்பது சிம்கார்டுகள் வரை வைத்திருக்கலாம் என்பது நாட்டின் பிற பகுதிகளுக்கான கட்டுப்பாடு. காஷ்மீர், அசாம் போன்ற பதற்றம் மிகுந்த இடங்களில் இந்தக் கட்டுப்பாடு மேலும் இறுக்கமாகிறது. காஷ்மீர், அசாம் பகுதிகளில் உள்ள ஒரு தனிநபர் ஆறு சிம் கார்டுகள் வரை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்.
ஒருவரின் ஆதார் அட்டையின் வாயிலாக எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை, ‘மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான டெலிகாம் அனலிடிக்ஸ் (TAF – COP)’ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்வதன் மூலம் பதிவு செய்யும் மொபைல் எண்ணின் பெயரில் உள்ள சிம் கார்டுகளின் எண்ணிக்கையை சரிபார்க்கவும், தேவையெனில் அவற்றை நீக்கவும் முடியும்.
அதனால், பொதுமக்கள் சிம்கார்டு பயன்படுத்தும் விஷயத்தில் எச்சரிக்கையாவும், அதேசமயம் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.