புதிய குழு!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறது திமுக. தேர்தல் முடிவடைந்ததிலிருந்தே, `அமைச்சரவையில் மாற்றம், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகப் போகிறார்’ என்ற செய்திகள் எட்டுத்திக்கும் வந்துகொண்டே இருக்கிறது. ஒருபக்கம் செய்திகள் வந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அறிவித்திருக்கிறது திமுக தலைமை.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஐந்து பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு உறுப்பினர்கள் தங்களின் ஆலோசனையையும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
`குறிஞ்சி’யில் சந்திப்பு:
கட்சி செயல்பாடுகள் ஒருபுறமிருக்க, நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய 234 தொகுதி பார்வையாளர்களைச் சந்திக்கவுள்ளார் அமைச்சர் உதயநிதி. இன்று வெளியான அறிவிப்பில், நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பான பணியை மேற்கொண்டு 40-க்கு 40 என்ற வெற்றி இலக்கை அடைய உதவியாக இருந்த அனைத்து தொகுதி பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கவுள்ளார். இதில் இளைஞரணி செயலாளருடன் இணைந்து சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவினர் நேரில் சந்தித்துப் பாராட்டுகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பானது, நாளை (23.07.2024) மாலை ஆறு மணியளவில், அமைச்சர் உதயநிதி பசுமை வழிச் சாலையில் உள்ள தனது அமைச்சர் இல்லமான குறிஞ்சியில் சந்திக்கவுள்ளனர்.
கட்சி சந்திப்புகள் அனைத்தும் அறிவாலயத்தில் அல்லது இளைஞரணி சார்ந்த சந்திப்புகள் அன்பகத்தில் நடைபெறும் என்ற நிலையில், இந்த சந்திப்பு குறிஞ்சி இல்லத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று காலைதான் பார்வையாளர்களுக்குச் சந்திப்பு நடக்கிறது என்ற தகவல் வந்திருக்கிறது. சென்னையில் இருப்பவர்கள் தவிரப் பெரும்பாலானோர் வெளியூரைச் சேர்ந்தவர்கள். தகவல் கிடைத்ததும் அனைவரும் சென்னைக்கு வரத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில், நன்றி தெரிவிப்பதைத் தாண்டி இன்னும் சில விஷயங்கள் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டாவது இளைஞரணி மாநாடு நடந்து முடிந்த சமயத்தில், அந்த மாநாட்டு வெற்றியை கொண்டாடும் வகையில் குறிஞ்சியில் அனைவர்க்கும் கறி விருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88