மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரி பூஜா கேட்கர், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தன்னுடைய சொகுசு காரில் சைரன் பொருத்தி வலம் வந்ததன் பின்னணியில், அவர் எத்தகைய முறைகேட்டின் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகியிருக்கிறார் என்ற விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. `சிவில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் கோட்டாவில் உள்ளே செல்ல போலி வருமான சான்றிதழைச் சமர்ப்பித்தது,
ஓ.பி.சி கோட்டாவுக்குள்ளும் மாற்றுத்திறனாளி பிரிவில் உள்ளே செல்ல போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் சமர்ப்பித்தது, அதற்காகப் போலி ரேஷன் கார்டு தயாரித்தது, மாற்றுத்திறனாளி என்று உறுதிப்படுத்துவதற்காகப் போலி மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பித்தது, இவையெல்லாம் முடிந்து பயிற்சியின்போது மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தைத் தனது அலுவலகமாக மாற்றியது என மலையளவு முறைகேட்டால் UPSC தேர்வு முறையையே பூஜா கேட்கர் மலைக்க வைத்திருக்கிறார்.
இவரின், தந்தை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, தாய் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், இருவரும் பண பலம், அதிகார பலம் கொண்டவர்கள். இப்படியிருக்க, இவ்வளவு தவறுகளைச் செய்து ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவதைப் பார்க்கையில், UPSC தேர்வு முறையின்மீதும் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பியிருக்கிறது. இவ்வாறிருக்க, தெலங்கானாவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற முதன்மைப் பணிகளில் எதற்கு மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு என கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்மிதா சபர்வால் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு விமான நிறுவனம் மாற்றுத்திறனாளி விமானியை வேலைக்கு அமர்த்துகிறதா… அல்லது தகுதி குறைவான ஒரு மாற்றுத்திறனாளி அறுவை சிகிச்சை நிபுணரை நீங்கள் நம்புவீர்களா… மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்பது, களப்பணியில் ஈடுபடுவது ஆகியவை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற அனைத்திந்திய சேவை (AIS) பணிகளின் இயல்பு. இதற்கு உடல் தகுதி தேவை. அப்படியிருக்க, முதன்மை சேவை பணிகளுக்கு முதலில் எதற்கு இத்தகைய இட ஒதுக்கீடு?” என ட்வீட் செய்திருக்கிறார். ஸ்மிதா சபர்வாலின் இத்தகைய ட்வீட் சமூக வலைத்தளங்களில் ஒரு வார்த்தைப்போரையே வெடிக்க வைத்திருக்கிறது.
அந்த வரிசையில், சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்குப் பயிற்சியளிக்கும் முன்னாள் அதிகாரி பால லதா மல்லவரபு, “என்னுடைய முதல் கேள்வி, நீங்கள் எப்படி இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடலாம்… இட ஒதுக்கீடு கொடுப்பதா வேண்டாமா என்பது அரசின் கொள்கை. இரண்டாவதாக, நிர்வாகத்தில் முதன்மை பதவிகளில் உடல் தகுதியை விட மன மற்றும் அறிவுசார் தகுதி முக்கியமானது. மூன்றாவதாக, ஒரு அரசு ஊழியரிடம் இரக்கமும் இருக்க வேண்டும். ஆனால், இவரிடம் இந்த குணங்களை என்னால் பார்க்க முடியவில்லை” என்று விமர்சித்திருக்கிறார்.
இவர் மட்டுமல்லாது, சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “இதுவொரு விலக்கப்பட்ட கண்ணோட்டம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் குறுகிய எண்ணங்களை எப்படிக் காட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது” ட்வீட் செய்திருக்கிறார்.
இவ்வாறு விமர்சனங்கள் கிளம்ப, மறுபக்கம் இணையதளவாசி ஒருவர் ஸ்மிதா சபர்வால் பதிவுக்கு ஆதரவாக, “ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ்/ஐ.எஃப்.எஸ்/ஐ.எஃப்.ஓ.எஸ் பணிகளில் எதற்கு எஸ்.சி/எஸ்.டி/பி.சி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்? அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால், இன்னும் தகுதியானவர்கள் பணியில் சேருவார்கள். இட ஒதுக்கீடு விதிகளில் நிறைய சீர்திருத்தங்கள் தேவை” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88