நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல், ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், கோவை மாநகராட்சி மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல், அடுத்த ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவைச் சேர்ந்த சரவணன், கோவை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆகியோர் உட்கட்சி மோதலால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலியாக உள்ள நெல்லை, கோவை மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பும் வகையில் மறைமுக தேர்தல் நடத்த மாநகராட்சி கூட்டங்களை கூட்டுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிற நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்பவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
.