பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் காலை தொடங்கியது. இதில், ஏற்கெனவே அறிவித்தது போல எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர்.
மேலும், பா.ஜ.க அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை எதிர்த்துக் குரல்கொடுக்கப்போவதாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர், தான் பேசும்போது மைக்கை அணைத்துவிட்டதாக பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியமைப்பதற்கு முக்கிய பங்கு வகித்த இரு கட்சிகளில் ஒன்றின் தலைவரும், பட்ஜெட் சிறப்பு நிதி பெற்ற பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.