Formula 4 Car Race: `தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கிறது திமுக அரசு'- அண்ணாமலை குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டு டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளை, மிக்ஜாம் புயல், அதைத் தொடர்ந்து பெய்த கனமழையின் பாதிப்புகள், மீட்புப் பணிகள் காரணமாக ஒத்திவைப்பதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்தப் போட்டியை நடத்த தொழிலதிபர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், தி.மு.க தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.

அண்ணாமலை

கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய தி.மு.க, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

இந்த F4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர் உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டமாகும். கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே ரூ.40 கோடி செலவிட்டுள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினின் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக் கனவுகளை நனவாக்க, நிதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்

மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், ரூ.25,000 முதல் ரூ.1,00,00,000 வரை வசூல் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்கும் நிதி வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது.

இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல. இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் கடினமாக உழைத்துச் சேர்க்கும் பணத்தை, தி.மு.க அரசு எப்படிக் கொள்ளையடிக்கிறது என்பதைத் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும். தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைத் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *