“பாஜக ஒரு இந்துத்துவா கட்சி, பாஜக-வின் சித்தாந்த வழிகாட்டியும், பல்வேறு சமயங்களில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புமான ஆர்.எஸ்.எஸ்ஸின் (RSS) கொள்கைகளை நிறைவேற்றுவதுதான் மோடி அரசின் வேலை” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இவ்வாறிருக்க, ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்ற 58 ஆண்டுகால தடையை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், துணை குடியரசுத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அவையில் புகழாரம் சூட்டியிருக்கிறார். முன்னதாக, இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் நியமனம் தொடர்பாக விமர்சித்த சமாஜ்வாதி எம்.பி லால் ஜி சுமன், “ஒருவரின் தரம் பற்றிய மத்திய அரசின் அளவுகோல், அந்த நபர் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வந்தவரா என்று பார்ப்பதுதான்” என்று கூறினார்.