கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. மண்ணுக்குள் புதைந்த மனிதர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், கேரள அரசு மத்திய அரசின் எச்சரிக்கைப்படி செயல்படவில்லை என்ற ரீதியில் உள்த்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படும் என ஒரு வாரத்துக்கு முன்பே கேரள அரசை மத்திய அரசு எச்சரித்தது. தென் மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதை தொடர்ந்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணயத்தின் ஒன்பது குழுக்களை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பியது. ஆனாலும், கேரள அரசு சரியான நேரத்தில் மக்களை வெளியேற்றவில்லை மீட்புக் குழுக்கள் சென்றதைத் தொடர்ந்து கேரள அரசு எச்சரிக்கையாக இருந்திருந்தால் நிலச்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம்” என்றார்.
அமித் ஷாவின் குற்றச்சாட்டு அதிர்வலையை ஏறடுத்தியிருந்தது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், “வயநாடு நிலச்சரிவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என யாரும் இல்லாமல் ஒரே இரவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி எப்படி வாழ்க்கையை நடத்துவார்கள் என்று சிந்தித்து மன கஷ்டத்துடன் இருக்கிறார்கள். அவர்களை திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்காகவும், அந்த பகுதியை புனர் நிர்மானம் செய்வதற்காகவும் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும். அனைத்து விதத்திலும் அரசு இயந்திரம் மக்களுக்கு உறுதுணையாக நிற்கும். முழுவதையும் இழந்தவர்களுக்கு வசிப்பதற்கான இடம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மத்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் அனைத்து முன்னறிவிப்புகளையும் கேரளா கடைபிடித்து வருகிறது. மாறி மாறி குற்றச்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. இப்படி ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது, கேரளா என்ன செய்தது என மத்திய உள்த்துறை அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார். இங்குள்ள உண்மை நிலை உங்கள் அனைவருக்கும் தெரியும். நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் அந்த சமயத்தில் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆரஞ்ச் அலர்ட் என்றால் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டருக்கு இடைப்பட்ட அளவில் மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், முதல் 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் 372 மில்லி மீட்டர் மழைய பெய்தது. 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை அறிவிப்பைவிட எத்தனையோ அதிகம் மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நிலச்சரிவு ஏற்படும் முன்பு ஒருமுறைக்கூட அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் வழங்கவில்லை. நிலச்சரிவு நடந்த பிறகு காலை 6 மணியளவில் அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசின் ஜியாலஜிக் சர்வே ஆஃப் இந்தியா சார்பில் வயநாட்டில் லேன்ட்ஸ் ஸ்லைட் வார்னிங் சிஸ்டத்துக்காக ஒரு நிறுவனம் ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் கடந்த 29-ம் தேதி வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில் ஜூலை 23 முதல் ஜூலை 28 வரை ஒவ்வொரு நாளும் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில் ஆரஞ்ச் அலர்ட்கூட அறிவிக்கவில்லை. 29-ம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பிலும் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. 30 மற்றும் 31-ம் தேதிக்கான முன்னெச்சரிகை அறிவிப்பு வெளியிட்ட ஜியாலஜிக் சர்வே ஆஃப் இந்தியா வயநாட்டில் கிரீன் அலர்ட் பிறப்பித்திருந்தது. மத்திய அரசின் மற்றொரு அமைப்பான வாட்டர் கமிஷன் ஜூலை 23 முதல் 29-ம் தேதிவரை இருவழிஞ்ஞி புழா மற்றும் சாலியாற்றில் பிரளய முன்னறிவிப்பு வழங்கவில்லை. கேரளா முன்பே கேட்டுக்கொண்டதால் என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் அனுப்பப்பட்டன. 9 குழுக்களை கேட்டு பெற்று அதில் ஒரு குழுவை ஏற்கனவே வயநாடுக்கு அனுப்பியிருந்தோம். ரெட் சோன் பகுதிகளில் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், அப்பகுதி மக்களை வேறு பகுதியில் தங்க வைத்திருந்தோம்.
காலநிலை மாற்றங்களால் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதி தீவிர மழையை இதற்கு முன்பு நாம் பார்த்தது இல்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும், அதை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டாமா? மத்திய அரசு இதை முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டும். பரஸ்பரம் குற்றம்சாட்டுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை. இது போன்ற பிரளயங்கள் ஏற்படும்போது அதை யார்மீதாவது சுமத்தி, அதற்கான பொறுப்பு எங்களுக்கு இல்லை என தப்பிக்க முடியுமா. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இது போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இதில் யாரையும் குற்றம்சொல்லி பலனில்லை. யார்மீதும் குற்றம்சாட்ட வேண்டிய காலக்கட்டம் இதுவல்ல. மக்களை மீட்கவும், மக்களுக்கு உதவவும், காணாமல்போன கிராமத்தை மீட்டெடுக்கவும் நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். அதற்குதான் மாநில அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். துயர சம்பவத்தில் தவறான பிரசாரங்கள் செய்யக் கூடாது. முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழக்கமாக உள்ளதுதான். அதன்படி பலரை காப்பாற்ற முடிந்தது. 6 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்த நிலச்சரிவு இரவு நேரத்தில் உயிர்களை காவுவாங்கி உள்ளது” என்றார்.