தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் கலந்தாய்வு கூட்டம், தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமார், கொறடா ஹசன் மௌலானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “ராகுல் காந்தி தலைமை ஏற்றால்தான் அடுத்த தலைமுறையை பாதுகாக்க முடியும். காங்கிரஸ் இயக்கத்தில் இணைய ஏராளமான இளைஞர்கள் தயாராக உள்ளனர். நான் பொறுப்பேற்றவுடன் ராகுல் காந்தி என்னை அனைவரையும் நேரில் சந்திக்க அறிவுறித்தினார். அதன் காரணமாகத்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
இந்த தேசம் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசும்போது, பா.ஜ.க அதை எதிர்க்கிறது. சாதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் முதன்முதலாக குரல் ஒலிக்கிறது. பாசிச கட்சி என்றால் அது பா.ஜ.க-தான். அவர்களுக்கு அரசியல் சட்டம், பண்பாடு, ஜனநாயகம் என்று எதன்மீதும் நம்பிக்கை இல்லை.
எவ்வளவு நாள் அவர்களது ஆட்சி நீடிக்கும் என்று சொல்ல முடியாது. அவர்களது ஆட்சிக்கு இரண்டு நபர்கள் முட்டு கொடுக்கின்றனர், எப்போது விலகிச் செல்வார்கள் என்று தெரியாது. விரைவில் ராகுல் காந்தி தலைமயில் ஆட்சி அமையும்” என்றார்.