Lebanon: மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம்; `லெபனானுக்குச் செல்ல வேண்டாம்'- இந்தியா எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டிற்கும் ஹமாஸ் அமைப்பிற்குமிடையில் பல மாதங்களாகப் போர் நிகழ்ந்து வரும் நிலையில், கோலன் ஹைட்ஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தன்னுடைய கவனத்தை லெபனான் மீது திருப்பியுள்ளது‌. கோலன் ஹைட்ஸ் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 12 குழந்தைகள் இறந்திருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் தரப்பிலிருந்து இதைச் செய்தது ஹிஸ்புல்லா அமைப்பு என்று கூறப்பட்டாலும் ஹிஸ்புல்லா அமைப்பு இதை மறுத்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை, கடந்த செவ்வாய் அன்று தெற்கு பெய்ரூட் நகரில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவரான ஃபுஆத் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டார். மேலும் ஃபுஆத் ஷுக்ர் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த ராணுவத் தளபதி என்றும் கோலன் ஹைட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய நபராகத் திகழ்ந்திருப்பதாகவும் இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் அவர் இஸ்ரேலுக்கு எதிராகப் பல்வேறு செயல்களில் ஈட்டுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் மற்றும் ஹவுதி அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதனால் லெபனானில் போர் பதற்றம் நீடிக்கிறது. இதன் காரணமாக லெபனான் இந்திய தூதரகம், “மறு அறிவிப்பு வரும்வரை இந்தியர்கள் தேவையின்றி லெபனானிற்கு செல்ல வேண்டாம். லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் தூதரகத்தோடு தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *