இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று மாலை முதல் 108 மி.மீ அளவிலான மழை பெய்துள்ளது. கேரளா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் என இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. கேரளாவில் நிலச்சரிவு, உத்தரகாண்டில் மேக வெடிப்பு என பெரும் பாதிப்பை இந்தியா சந்தித்திருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த நிலையில், உத்தரகாண்ட் மேக வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில்,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கர்கே, “நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில், மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் மாநிலங்களுக்கு கூடுதல் பேரிடர் மேலாண்மை நிதியை உடனடியாக வழங்க வேண்டும். வெள்ளம், கனமழை, மேக வெடிப்பு மற்றும் வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கையாள்வதற்கான உறுதியான கொள்கையை உருவாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.