தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவேரி ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களுக்கு ஓராண்டுக்கு குடிநீராக 15 டி.எ.ம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் மேலாண்மைக்கு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத தற்போதைய தி.மு.க அரசு, வெறும் வார்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 5 கோடி மக்கள் காவிரி ஆற்றை நம்பியே உள்ளனர். இதைப் புரிந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் வரும் காலத்தில் காவேரியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்கூட கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்தி தங்களின் கல்வியையும் வாழ்கையையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?