கவுன்சிலர்களின் அட்டென்டண்ஸ் ஷீட்; நேருவிடமே கொந்தளித்த சீனியர்கள் – கோவை மேயர் தேர்தல் ரிப்போர்ட்!

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி நேற்று அறிவிக்கப்பட்டதும் சீனியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. மத்திய மண்டல தலைவர் மீனாலோகு கண்கலங்கியபடியே சென்றார். மறுபக்கம் நெல்லை மாநகராட்சியில் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக ஒருவர் களமிறங்கி, கணிசமான ஓட்டுகளையும் வாங்கி பயம் காட்டிவிட்டார். இதனால் கோவை மாநகராட்சியில் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் திமுகவினர்.

அன்பகம் கலை
ரங்கநாயகி

ஏற்கெனவே அமைச்சர்கள் நேரு, முத்துசாமி  மறைமுக தேர்தலை சுமூகமாக நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தனர். மேலும், தலைமையில் இருந்து அன்பகம் கலை கோவை வந்திருந்தார். நேற்று இரவு வரை அதிருப்தியில் இருந்த கவுன்சிலர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானப்படுத்தினர்.

காலை 9 மணியளவில் ஒரு மண்டபத்தில் கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி காலை 8 மணி முதலே கையில் அட்டென்டண்ஸ் ரிப்போர்ட்டுடன் கவுன்சிலர்களுக்கு போன் செய்து, ‘சீக்கிரம் வாங்க’என்று கூறிக்கொண்டிருந்தார். முன்னாள் மேயர் கல்பனாவை தவிர அனைத்து கவுன்சிலர்களும் அட்டென்டண்ஸ் போட்டுவிட்டனர்.

அமைச்சர் முத்துசாமி
டிபன்
அட்டென்டண்ஸ்
அட்டென்டண்ஸ்

அங்கு அனைவருக்கும் டிபன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இட்லி, ஊத்தாப்பம், பொங்கல், சேமியா, வடை, சாம்பார், சட்னி, ஜிலேபி, காபி  ஆகியவை பரிமாறப்பட்டன. முத்துசாமி, ரங்கநாயகி மற்றும் கவுன்சிலர்கள் அங்குதான் காலை உணவை உட்கொண்டனர். நேரு, முத்துசாமி, அன்பகம் கலை ஆகியோர் கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

“தலைமை ரங்கநாயகியை தான் அறிவித்துள்ளது. அதனால் அவருக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும். தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்படக் கூடாது” என்று கூறினார்கள். இருப்பினும் மேயர் பதவியை எதிர்பார்த்திருந்த சீனியர்கள் பலரும் கடும் அதிருப்தியில் இருந்தனர். மீனா லோகு இன்று நடந்த கூட்டத்துக்கும் அழுது கொண்டே வந்தார்.

சாந்தி முருகன்

மாநகராட்சி பணிகள் குழு தலைவரும் 63வது வார்டு கவுன்சிலருமான சாந்தி முருகன், “கட்சிக்கு உழைச்சு.. உழைச்சு ஓடா தேஞ்சுட்டோம். 50 வருஷமா கட்சிக்கு கஷ்டப்பட்டு கோடிக்கணக்குல இழந்து ஒடுக்கப்பட்ருக்கோம். நாங்க சும்மா வரலை. இதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.” என்று கொந்தளித்தார்.

அவரை சக கவுன்சிலர்களும், அவரின் கணவர் முருகனும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அவர் தொடர்ந்து ஆதங்கத்தை கொட்டியதால் முருகன், சாந்தியின் முதுகில் ஒரு அடி வைத்து ‘பேசாமல் இரு’ என்று கூறினார். அமைச்சர் நேரு, ‘உட்காருங்கமா. நான் சொல்றதை கேளுங்க. நானும் இந்த பதவிக்கு ஈஸியா வரலா. கஷ்டப்பட்டு படிப்படியா தான் வந்தேன். உங்களுக்கும் எல்லாம் கிடைக்கும்.’ என்று சமாதானப்படுத்தினார்.

கோவை மாநகராட்சி
அமைச்சர் நேரு
முன்னாள் மேயர் கல்பனா

பிறகு கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி மாமன்றத்துக்கு வந்தனர். முன்னாள் மேயர் கல்பனாவும் சிரித்த முகத்துடன் வருகை புரிந்தார். மாமன்றத்துக்குள் கவுன்சிலர்களின் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேனா உள்ளிட்ட எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பொதுவாக மாமன்ற கூட்டங்களில் மண்டலம் மற்றும் நிலைக்குழுத் தலைவர்களுக்கு முன்வரிசை ஒதுக்கப்படும்.

இன்று மறைமுக தேர்தல் என்பதால் முன்வரிசையில் கவுன்சிலர்கள் அமர்ந்துவிட்டனர்.  மேயர் ரேஸில் இருந்த கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி இதைப் பார்த்து அதிர்ச்சியாகி, “அந்த சீட்தான் தரல (மேயர்). இப்ப நான் உக்காந்திருந்த சீட்டும் இல்லையா.” என்று ஆதங்கப்பட்டார். அதேபோல மேயர் பதவிக்கு முயற்சி செய்த சாந்தி முருகன், “எங்களுக்கு கடைசி தானே. ரைட்டு அங்கயே போய்க்கறோம்.” என்று சொல்லி சென்றார்.

மேயர் ரங்கநாயகி

அங்கிருந்த அதிகாரிகளிடம் கல்வி குழுத் தலைவர் மாலதி, “சாப்பிட ஸ்நேக்ஸ் கொடுப்பீங்களா. ஸ்வீட்ல லட்டு கொடுங்க.” என்று கூறினார். அருகில் இருந்த காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, “எனக்கு அல்வா இருந்தா கொடுங்க.” என்று கிண்டலடித்தார்.

ரங்கநாயகியை தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதன் காரணமாக அவர் கவுன்சிலர்களின் ஒரு மனதான ஆதரவுடன் கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் முடிந்து ரங்கநாயகி மேயராக பதவியேற்பதற்கு முன்பே, முன்னாள் மேயர் கல்பனா, மீனா லோகு ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்.

மேயர் ரங்கநாயகி

மற்ற கவுன்சிலர்கள் ரங்கநாயகி மேயராக பதவியேற்றதும் அவருக்கு சால்வை போட்டு வாழ்த்தினர். இதில் நிறைய சால்வைகள் ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிலர், அதிலிருந்த சால்வைகளை எடுத்து போர்த்தி வாழ்த்துகள் சொல்லினர். கொடுத்த பூங்கொத்துகளே மீண்டும் கொடுக்கப்பட்ட காட்சிகளும் நடந்தன.

பதவியேற்று முடிந்ததும் ரங்கநாயகி கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர்களை குறிப்பிட்டு நன்றி சொன்னார். செந்தில் பாலாஜி பெயரை குறிப்பிட்ட பிறகுதான், துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு நன்றி சொன்னார். ரங்கநாயகியின் கணவர் ராமச்சந்திரன் அவருடனே இருந்தார். மேயராக பதவியேற்ற பிறகும் கூட மேடையில் அவருக்கு அவ்வபோது அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருந்தார்.

கணவர் ராமச்சந்திரனுடன் ரங்கநாயகி
முத்துசாமி
அமைச்சர்களுடன் மேயர் ரங்கநாயகி

கடைசியில் அமைச்சர் முத்துசாமி மேயர் ரேஸில் இருந்த சில கவுன்சிலர்களை அழைத்து பேசி சமாதானப்படுத்தி சென்றார். “நெல்லையில் மறைமுக தேர்தலின்போது பிரச்னை  நடந்தது.  கோவையில் பிரச்னையே இதன்பிறகு தான் தொடங்கும்.” என்று சொல்லியபடி நகர்ந்தனர் கவுன்சிலர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *