தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டலப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முந்தினம் மதியம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் நாகராஜன் தலைமை வைத்தார். இதில், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தேர்தல் தோல்வி குறித்து தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அப்போது தர்மபுரி மாவட்ட முன்னாள் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாவட்ட செயலாளர் சங்கர் பேசுகையில், “முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் 1996 ஆம் ஆண்டு தான் அதிமுக-விற்குள் வந்தார். எங்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அதிமுகவில் இருக்கிறதே… ஆனால் 1996-ல் வந்த கே.பி அன்பழகன் எல்லா பொறுப்புகளையும் அவரே வைத்துக்கொண்டார். இது எத்தனை பேருக்கு தெரியும்?” என்றார்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறிப்பிட்ட கே.பி அன்பழகன், “நான் எப்போது கட்சிக்கு வந்தேன் என்று கட்சியில் இருக்கும் மூத்தவர்களை கேட்டு தெரிந்து கொள், இதுபோன்று பேசக்கூடாது” எனக் கூறி சங்கரை உடனடியாக மேடையை விட்டு கீழே இறக்கும்படி கூறினார்.
அப்போது சங்கரின் உறவினரான அதிமுக மாநில விவசாய பிரிவு அமைப்பு செயலாளர் டி.ஆர் அன்பழகன், “அவர் கருத்து சொல்ல உரிமை உள்ளது” என்று சங்கருக்கு ஆதரவாக பேசினார். இதனால் டி.ஆர் அன்பழகன், கே.பி அன்பழகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதைக் கண்ட மேடையின் முன் இருக்கையில் இருந்த இரு தரப்பு ஆதரவாளர்கள் இரண்டு கோஷ்டிகளாக மாறி மேடையில் ஏறி வாக்குவாதம் செய்தனர். மேலும் அனைவரும் முற்றுகையிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர் வெற்றிவேல், “சங்கர் அவருடைய கருத்தை கூறியுள்ளார். அதற்கு மாவட்ட செயலாளர் பதில் கூறியுள்ளார். அதற்குள் நீங்கள் ஏன் இருக்கையை விட்டு எழுந்து வருகிறீர்கள்?. நீங்கள் வருவதால் தான் சண்டை ஏற்பட்டது போல் உள்ளது. நீங்கள் இருக்கையில் அமருங்கள்” என்றார். பின்னர் இருதரப்பையும் சமரசப்படுத்தினார். அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென உட்கட்சி பூசலால் சலசலப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88