"வங்கதேசத்தை ஆட்சி செய்ய அமெரிக்காவை அனுமதித்திருந்தால்..!"- குற்றம்சாட்டிய ஷேக் ஹசீனா?!

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்கொண்ட சிக்கலால், கடந்த 5-ம் தேதி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, வங்கதேசத்திலிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு, ‘ஏழை, எளியவரின் வங்கியாளர்’ எனப் புகழப்படும், நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை, வங்கதேச குடியரசுத் தலைவர் ஆலோசனையின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கிறது. மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை இந்த ஆட்சி தொடரும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.

ஷேக் ஹசீனா

ஆனாலும், தற்போதுவரை வங்கதேசத்தின் சில பகுதிகளில் வன்முறை நீடிப்பதாகவும் செய்திகள் தொடர்கின்றன. இதற்கிடையில், தன் ராஜினாமா குறித்து எதுவும் பேசாமல் இருந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக அதற்கான காரணத்தை விளக்கியிருப்பதாக ஒரு செய்தி பரவியது. இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியில், “பிரதமர் பதவியை நான் ராஜினாமா செய்ததற்கான காரணம், மேலும் வன்முறை தொடரக்கூடாது, உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதுதான்.

மாணவர்களின் ஒரு பகுதியினர் இறந்த உடல்கள் மீது அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே, நான் ராஜினாமா செய்வதன் மூலம் அதைத் தடுத்தேன். மாணவர்களை தூண்டுவதற்காக எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன. ஒருபோதும் போராட்டகாரர்களை ‘ரசாக்கர்கள்’ (1971 விடுதலைப் போரின் போது பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஒத்துழைப்பாளர்களாக நம்பப்பட்ட மக்களைக் குறிக்க “ரசாகர்கள்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது) என நான் குறிப்பிடவில்லை. தேசத்தை சீர்குலைக்க சதிகாரர்கள் உங்கள் அப்பாவித்தனத்தை எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அப்போது நான் பேசிய அன்றைய முழு வீடியோவைப் பாருங்கள்.

Sheik Hasina – ஷேக் ஹசீனா

வங்கதேசத்தை ஆட்சி செய்ய அமெரிக்காவை அனுமதித்திருந்தால், இந்நேரம் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கலாம். நீங்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதனால் நான் உங்களுக்கு தலைமை தங்கினேன். எனக்கு அவ்வளவு பலமாக இருந்தீர்கள். தயவுசெய்து தீவிரவாதிகளின் சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என என் மண்ணின் மக்களிடம் மன்றாடுகிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் தன் எக்ஸ் பக்கத்தில்,“சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட எனது தாயாரின் ராஜினாமா அறிக்கை முற்றிலும் பொய்யானது, புனையப்பட்டது. வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை நான் அவரிடம் உறுதிப்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *