கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அதானி குழுமத்திற்கு எதிரான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக செபி விசாரித்து வந்த நிலையில், அதானி நிறுவனத்துக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் செபி-யின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர், பங்குகள் வைத்திருந்ததாக புதிய அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டு புயலைக் கிளப்பியிருக்கிறது, ஹிண்டன்பர்க். இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கும் நிலையில், மாதபி பூரி புச்சும், அவருடைய கணவரும், அதானி குழுமமும் இந்தக் குற்றச்சட்டை மறுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில்,“இந்திய பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ள நிலையில், அதை விசாரிக்க வேண்டிய நடுவரான செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவரும் அந்த நிறுவனத்துடன் சமரசம் செய்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன. முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், பிரதமர் மோடி… செபி தலைவர்… அதானி… இதில் அதற்கு யார் பொறுப்பேற்பார்? இந்த விவகாரத்தில் கூட்டு நாடாளுமன்றக் குழுவை பிரதமர் மோடி ஏன் எதிர்க்கிறார்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க தலைவர்கள், “எதிர்க்கட்சித் தலைவர் இப்போது வெளிப்படையாக இந்தியப் பங்குச் சந்தைகளின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகத்தைத் தூண்டி வருகிறார். நமது பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் அப்பட்டமான முயற்சி இது” என விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியா தொகுதி பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் எக்ஸ் பக்கத்தில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி… அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது திட்டமாக இருக்கிறது.
நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை, ராகுல் காந்தியின் ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.