காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் மிக முக்கிய பங்காற்றியவர், நிதிஷ் குமார். இவர், 1998 – 1999 காலகட்டங்களில் அடல் பிகாரி வாஜ்பாய் அரசாங்கத்தில், மத்திய ரயில்வே அமைச்சராகவும், பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து, 2000 – 2004 வரையுலான வாஜ்பாய் அரசாங்கத்திலும் மீண்டும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மிக முக்கிய நபராகக் கருதப்பட்ட இவர், 2009-ல் நடைபெற்ற தேர்தலில், பீகாரில் பா.ஜ.க, 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
இருப்பினும், அதற்கடுத்து நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அந்தக் கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டார். அதற்கு காரணமும் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த மோடி தலைமையிலான ஆட்சியே என்று அவர் கூறினார். ஆனால், அந்தத் தேர்தலில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே இவரின் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, 2015-ல் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து வெற்றி பெற்றார்.