தேவநாதன் கைது: `பாஜக கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தும் செயல்!' – திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், மயிலாப்பூரில் தான் நடத்திவந்த நிதி நிறுவனத்தில் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தேவநாதன் யாதவ்

இது குறித்து அண்ணாமலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ், தமிழகக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு பாஜக உறுதியாக உள்ளது. தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.

அண்ணாமலை

அதே நேரத்தில், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக்காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தேவநாதன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *