அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது. ஜோ பைடன் தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கியதிலிருந்து, பிரசாரத்தின் வேகமும், வார்த்தைப் போர்களும் அதிகரித்திருக்கின்றன. கமலா ஹாரிஸுக்கு ஆதரவான சூழல் நிலவுவதாக கருத்துகணிப்பு முடிவுகள் வெளியானதிலிருந்து டொனால்ட் ட்ரம்ப், தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துவருகிறார். அதில் ஒன்றுதான் எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க்குடன் ட்ரம்ப் நடத்திய நேர்காணல்.
இந்த நேர்காணலில், கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆகியோரின் நிர்வாக திறன் குறித்து, ட்ரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். நேர்காணலின் ஒருபகுதியில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் தங்கள் நாட்டின் சிறப்பான நிர்வாகத்தில் உச்சத்தில் இருக்கின்றனர். இந்த தலைவர்கள் சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதுவும் அந்த தலைவர்களின் அன்பின் வேறு வடிவம். அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள். எனவே, அவர்களை சமாளிக்கும்படியான வலுவான அதிபர் ஒருவர் அமெரிக்காவுக்கு தேவை.