“தமிழ்நாட்டு மக்கள் தொடந்து அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், “ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், 6,64,180 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், 14,54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். இறையூரில் தொழிற் பூங்கா, திருச்சி, மதுரையில் புதிய டைட்டில் பூங்கா, விழுப்புரம், திருப்பூர்,வேலூர், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் மினி டைட்டில் பூங்கா, பரந்தூரில் விமான நிலையம் என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
இன்று சில திட்டங்களை அறிவிப்பதில் மகிழ்கிறேன். முதல்வர் மருந்தகம், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தொழில் தொடங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம், தியாகிகள் ஓய்வூதியம் ரூ,1000 உயர்த்தி ரூ.21,000-மாக வழங்கப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்தி ரூ.11,500 வழங்கப்படும். இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதியை ஆய்வு செய்ய பல்துறை அறிஞர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். இந்த குழு எதிர்காலத்தில் ஆபத்துகளை குறைக்க அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழவேண்டும் என்பதற்காக என்னை நான் ஒப்புக் கொடுத்திருக்கிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடந்து அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குகிறேன்.” என்றார்.