`மனசாட்சி இருந்தால் மம்தா பதவி விலகணும்… ஸ்டாலினுக்கு கூட்டணிதான் முக்கியமா?!' – குஷ்பு காட்டம்

மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் இந்த விஷயத்தின் தீவிரத்தை நாடு முழுவதும் கடத்துகிறது. இந்த நிலையில், இனியும் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராகத் தொடர மம்தா பானர்ஜிக்கு தகுதியிருக்கிறதா என பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – கொல்கத்தா

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய குஷ்பு, “மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்னைகள் நடக்கிறது. நாட்டில் தற்போது ஒரே பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அப்படியிருக்க, கொல்கத்தாவில் பெண்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு கிடைக்கும், அவர்கள் முன்னேறுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும்போது, பெண்களுக்கெதிராக பல பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கிறது.

அதற்கான தீர்வும் இல்லை. பெண்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கு வங்கத்தில் நாம் பார்க்கவில்லை. சந்தேஷ்காளி விவகாரத்தில் மம்தா பானர்ஜி அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க எவ்வளவோ விஷயம் செய்தார். மம்தா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எப்படி நிம்மதியாக தூக்கம் வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

குஷ்பு

அந்த மருத்துவரின் உடலில் ஒவ்வொரு இடத்திலும் கடிக்கான தடயம் இருக்கிறது. ரோட்டில் தெருநாய்கள் கடித்தால்கூட அவ்வளவு கடி இருக்காது. இவ்வளவு நடந்திருக்கும்போது, மருத்துவக்கல்லூரியின் முதல்வரைப் பாதுகாக்க என்ன செய்யமுடியுமோ அவை எல்லாவற்றையும் மம்தா செய்கிறார். அவர் எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கின்ற மாதிரி இல்லை.

இந்தப் பிரச்னையெல்லாம் பார்க்கும்போது, மம்தா இன்னும் அங்கு முதலமைச்சராகத் தொடர வேண்டுமா? பெண்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்கேன் என்று சொல்வதற்கு மம்தாவுக்கு தகுதி இருக்கிறதா? முதலமைச்சராக நீடிக்க தகுதியிருக்கிறதா? தன்னை ஒரு பெண் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியிருக்கிறதா? கொல்கத்தா உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகே சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குள் தடயங்களை அழித்துவிட்டார்கள்.

மம்தா

மம்தா பானர்ஜியிடம் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கிறதா? மாநில மக்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று முதல்வர் நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கிறார். அப்படி என்ன ஆசை அந்த பதவி மீது? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துதான் ஆகணும். கனிமொழி இதில் வாய்திறக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு கூட்டணிதான் முக்கியமா?” என்று கேள்வியெழுப்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *