ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சாவின் (ஜே.எம்.எம்) மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் பா.ஜ.க-வுக்கு தாவுவதாக செய்திகள் பரபரக்கின்றன.
ஜே.எம்.எம் கட்சியின் மூத்த தலைவராகவும், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த சம்பாய் சோரன், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்றார். முதல்வர் ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறை செல்ல நேர்ந்த சூழலில், ஹேமந்த் சோரனின் மனைவியான கல்பனா சோரன் முதல்வராவார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார். ஜே.எம்.எம் கட்சியில் நீண்டகாலமாகப் பயணித்துவரும் இவர், பழங்குடி மக்களிடையே செல்வாக்குப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் ஆட்சியதிகாரத்தில் இருந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அவர் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், ஜார்க்கண்ட் அரசியல் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பா.ஜ.க-வில் சேரப்போகிறார் என்ற செய்தி பரபரப்பை அதிகரித்திருக்கிறது. நேற்று (ஆக. 18) திடீரென டெல்லி சென்றார் சம்பாய் சோரன். ‘தனிப்பட்ட காரணங்களுக்காக‘ டெல்லி வந்ததாக அவர் தெரிவித்தார். பா.ஜ.க-வில் இணைவதற்காகத்தான் அவர் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்று செய்திகள் பரபரப்பைக் கிளப்பின.
இந்த நிலையில், சம்பாய் சோரனிடமிருந்து ஓர் அறிக்கை வெளியானது. ‘கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் முதல்வராக நான் பங்கேற்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் கட்சித் தலைமையால் திடீரென ரத்துசெய்யப்பட்டன. முதல்வரின் நிகழ்ச்சியை மற்றொருவர் ரத்து செய்வதைவிட, ஜனநாயகத்தில் வேறு எதுவும் அவமானமாக இருந்துவிட முடியாது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு என்னிடம் கூறினார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே ராஜினாமா செய்தேன். அந்த நேரத்தில் என் சுயமரியாதை மிகவும் பாதிக்கப்பட்டது’ என்று சம்பாய் சோரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது, சொந்தக் கட்சி தொடங்குவது, வேறு கட்சியில் இணைவது என்று மூன்று வாய்ப்புகள் தமக்கு முன்பு இருப்பதாக சம்பாய் சோரன் கூறுகிறார். அவர், பா.ஜ.க-வில் இணையப்போகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க-வில் அவர் இணைந்தால், நிச்சயமாக அது ஜே.எம்.எம் கட்சியைப் பாதிக்கும். பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ‘கொல்ஹான்’ பிராந்தியத்தில் ஜே.எம்.எம் கட்சிக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. அந்தப் பகுதியில் ஜே.எம்.எம் கட்சியின் முகமாக இருப்பவர் சம்பாய் சோரன்.
2019 சட்டமன்றத் தேர்தலில், கொல்ஹான் பிராந்தியத்தில் இருக்கும் 14 சட்டமன்றத் தொகுதிகளில், ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க-வால் ஜெயிக்க முடியவில்லை. அதேபோல, கடந்த மக்களவைத் தேர்தலிலும் அந்தப் பகுதியில் அமைந்திருக்கும் மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க-வால் ஜெயிக்க முடியவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் பா.ஜ.க-வுக்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் கவலையை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில்தான், ‘கொல்ஹான் புலி’ என்று அழைக்கப்படும் அளவுக்கு பழங்குடி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற சம்பாய் சோரனை இழுப்பதற்கான ஆபரேஷனில் பா.ஜ.க இறங்கியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பா.ஜ.க-வில் சம்பாய் சோரன் இணைந்துவிட்டால், ஜே.எம்.எம் கட்சிக்கு பழங்குடியினர் மத்தியில் இருக்கும் செல்வாக்கில் கொஞ்சம் பாதிப்பு ஏற்படும்.
அது சிறிய பாதிப்பாக இருந்தாலும்கூட, வரும் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியில் தொடர வேண்டும் என்ற ஹேமந்த் சோரனின் கனவையே அது தகர்த்துவிடக்கூடும். ஆகவேதான், குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்து ஜார்க்கண்டில், குடும்பங்களையும், கட்சிகளையும் உடைக்கும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பா.ஜ.க-வை சாடுகிறார் ஹேமந்த் சோரன்.
பா.ஜ.க-வினரோ, சம்பாய் சோரன் தலைமையிலான ஆட்சி வெகு சிறப்பாக இருந்ததாக புகழ்பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் அரசியலில் குழப்பமான சூழலில் நிலவுகிறது. இது, ஜே.எம்.எம். கட்சிக்கு கவலையையும், பா.ஜ.க-வுக்கு உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. சம்பாய் சோரன் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றாலும் தற்போது அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88