நடிகர் விஜய் தனது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். செப்டம்பர் மாதத்திற்குள் கட்சிக் கொடியை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுக விழா வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அன்று காலை 9 மணிக்குள் கட்சிக்கொடியை விஜய் ஏற்றவுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் எண்ட்ரி ஆனார் நடிகர் விஜய். முதல் மாநாட்டுக்குத் தயாராகி வரும் அவர் அதற்கு முன்பாக, வரும் வியாழக்கிழமை கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு மேல் இந்நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. காலை 11 மணிக்குள்ளாக கட்சியின் கொடியை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொடி அறிமுக விழாவில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். செப்டம்பர் இறுதியில் விக்கிரவாண்டியில் மாநாடு நடக்கவுள்ளதாகவும் அதற்குள் கொடியை தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, ஸ்நேகா, லைலா, மைக் மோகன், ஒய். ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்துடைய ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
தி கோட் படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.