“பயத்தின் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து முதல்வர் விழா நடத்தி உள்ளார்…” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விமர்சித்துப் பேசியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “கள்ளர் சீரமைப்புத் துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்திலுள்ள பிறமலைக்கள்ளர் சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகள் மூடப்படவுள்ளது.
விமர்சனத்திற்கு ஒரு எல்லை வேண்டும் என சொன்ன அண்ணாமலை, தி.மு.க-வினரை மிக கேவலமாக பேசி உள்ளார். கைப்பேசியில் வந்த அழைப்பின் பேரில் கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை ஒடோடி சென்று பங்கேற்றுள்ளார், திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலை, தற்போது புகழ்ந்து பேசி மாட்டிக்கொண்டார். ஆடு சரியாக மாட்டிக் கொண்டது, பயத்தின் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து முதல்வர் விழா நடத்தி உள்ளார்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட துறைகளுக்கு பயந்து மத்திய அரசை அழைத்து விழா நடத்தி உள்ளனர். அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என மீண்டும் நிரூபணம் செய்து விட்டார், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்த அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவில்லை, ஒரு இளைஞர் அரசியலுக்கு வருவதை தி.மு.க அரசு தடுக்கிறது, தமிழகத்தில் தி.மு.க-வை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது என நினைக்கிறது. த.வெ.க நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் தி.மு.க அரசு அனுமதி மறுக்கிறது? இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என கூறினார்.