கிருஷ்ணகிரி அருகே, தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் சிலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளார். பல்நோக்குக்குழுவில் சமூகப் பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் பள்ளிக் கல்வி இயக்குநர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தரவேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.
முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி, அதில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிவராமன் மீது போக்சோ வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னை வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டு சிவராமன் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. நிலப்பிரச்னையை தீர்த்து வைப்பதாகக் கூறி 7 பேரிடம் இருந்து 36 லட்சம் ரூபாயை பெற்று சிவராமன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்து பணத்தை பெற்றதாகவும், நீதிமன்றத்தின் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது போல போலியாக ரசீது தயார் செய்து ஏமாற்றியதாகவும்,
பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, சிவராமன் பற்றிய செய்தி வெளியானவுடன் விசாரித்த போது தான், வழக்கறிஞர் எனக் கூறி தங்களை ஏமாற்றியது தெரியவந்ததாகவும், தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மேலும், சிவராமனுடன் சேர்ந்து அமரேசன் என வழக்கறிஞரும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர்.
.