மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும், மருத்துவமனைகளில் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சட்டம் கோரியும் நாடெங்கிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் பெண்களுக்கு நாளும் நேரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தரவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இந்த வழக்குகளில் விசாரணையை விரைந்து முடித்து கடுமையான தண்டனை வகையில் சட்டம் வேண்டுமெனவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும், பல சந்தர்ப்பங்களில் கொலையுடன் கூடிய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். கிடைக்கும் தரவுகளின்படி, நாடு முழுவதும் தினமும் கிட்டத்தட்ட 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் இது உலுக்குகிறது. எனவே, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமை. இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் மத்திய சட்டத்தின் மூலம் இத்தகைய தீவிர பிரச்னைகளில் தீர்வு காணவேண்டும்.
மேலும், இதுபோன்ற வழக்குகளில் விரைவான விசாரணைக்காக விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதை அந்த சட்டம் கருத்தில்கொள்ள வேண்டும். முக்கியமாக விரைவான நீதியை உறுதிசெய்யும் வகையில் விசாரணையை 15 நாள்களுக்குள் முடிக்க வேண்டும்” என்று மம்தா குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88