தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கிறார், நடிகர் விஜய். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்திருக்கிறார். இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இன்று கொடியை அறிமுகம் செய்து பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவொருபுறம் இருக்க மறுபக்கம் விஜய்யைக் கூட்டணிக்குள் சேர்க்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன என்கிற தகவலும் பரபரக்கிறது.
ஆரம்பம் முதலே விஜயை கூட்டணிக்குள் கொண்டுவருவதில் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்வம் காட்டி வருகிறார் என்கிறார்கள். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய். அதற்கான பணிகளைச் செப்டம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கிறார். கூட்டணி தொடர்பாகத் தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவை விஜய்தான் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கட்சியின் உள்விவகாரங்களை அறிந்தோர் பேசுகையில், “விஜய்யைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் சீமானுக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் தனது தலைமையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என நினைக்கிறார்.
ஆனால், `நடிப்பது நாடாளும் தகுதியல்ல’ என நா.த.க தொடர்ந்து பேசி வருகிறது. கமல், ரஜினியை அட்டாக் செய்வதில் இனி எந்த நடிகருக்கும் கட்சி தொடங்க ஆசையே வரக்கூடாது’ எனச் சீமானே பேசியிருக்கிறார். அப்படியெல்லாம் பேசிவிட்டு இன்று விஜய்யுடன் கூட்டணி வைப்பது எப்படிச் சரியாக இருக்கும்” எனத் தம்பிகள் தகராறு செய்கிறார்கள். இதில் தலையைப் பிய்த்துக்கொண்டு நிற்கிறார், சீமான்.
இதேபோல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “எம்.ஜி.ஆர். போலச் சம்பாதித்த பணத்தை மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறார் நடிகர் விஜய். எனவே நடிகர் விஜய் எனும் இளைஞர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவருடைய கொள்கை செயல்பாடுகள் தெரிய வரும். நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லது தான். கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” எனப் பேசியிருக்கிறார்.
மேலும் அவர், “நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவில்லை, ஒரு இளைஞர் அரசியலுக்கு வருவதை தி.மு.க அரசு தடுக்கிறது, தமிழகத்தில் தி.மு.க-வை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது என நினைக்கிறது. த.வெ.க நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் தி.மு.க அரசு அனுமதி மறுக்கிறது? இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என பேசியிருக்கிறார்.
இதையடுத்து அ.தி.மு.க-வின் உள் விவகாரங்களை அறிந்தோர் பேசுகையில், “அம்மா மறைவுக்குக் கட்சி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா எனப் பிரிந்து கிடைப்பதால் தொடர் தோல்வி ஏற்பட்டுள்ளது. அதைச் சீரமைக்க எடப்பாடி பல்வேறு வழிகளில் முயன்று வருகிறார். ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வந்தால் அ.தி.மு.க பலமடையும் என எடப்பாடி தரப்பு விரும்புகிறது. அதன் அடிப்படையில் கூட செல்லூர் ராஜு பேசி வருகிறார்” என்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பா.ஜ.க கூட்டணி மாமன், மச்சான் கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அ.தி.மு.க, தி.மு.க-வும் பா.ஜ.க-வுக்கு பங்காளிகள் தான். எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் மாமன் – மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜய்யும் மாமன் – மச்சான் தான். அவர் மாமன் – மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்” எனப் பேசியிருக்கிறார். ஆனால் இதைக் கமலாலய சீனியர்கள் ரசிக்கவில்லை என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகிகள் சிலர், “2026 தேர்தலில் அண்ணாமலை தலைமையில்தான் ஆட்சி அமைப்போம் எனப் பேசி வந்தார். தற்போது விஜய்யைக் கூட்டணிக்கு அழைக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது ஆட்சி அமைப்பதற்கான பலம் இருப்பதாக அண்ணாமலை முன்பு சொன்னதை மக்கள் எப்படி நம்புவார்கள். எனவே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது” என்றனர். இந்த பஞ்சாயத்துக்கள் ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கம் விஜய் கூட்டணிக்குள் வருவாரா என்கிற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “விஜய் பிரபலமான நடிகராக இருக்கலாம். ஆனால் அவருக்கு இருக்கும் வாக்கு வங்கி என்னவென்றே தெரியவில்லை. எனவே அதைத் தெரிந்துகொள்ள முதலில் தனியாக நிற்கவே ஆசைப்படுவார். அதற்குள் கூட்டணிக்கு அழைக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டு, பா.ஜ.க மீது மதவாத குற்றச்சாட்டு இருக்கின்றன. எனவே அரசியலுக்கு வந்ததும் குற்றச்சாட்டு இருக்கும் கட்சிகளுடன் இருக்க விஜய் விரும்பமாட்டார்.
நா.த.க மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஆனால் சீமானை வளர்க்க விஜய் விரும்பமாட்டார். மறுபக்கம் 10 ஆண்டுகளாகக் கட்சி நடத்தும் சீமான், அரசியலுக்கு வந்த உடனேயே விஜயை அதிகாரத்துக்குக் கொண்டுவர விரும்ப மாட்டார். இதற்கிடையில் அ.தி.மு.க, பா.ஜ.க, நா.த.க மீது விஜய்க்கு என்ன மாதிரியான பார்வை இருக்கிறது என்றும் தெரியவில்லை. இருப்பினும் கட்சியைச் சிறப்பாக நடத்தினார் என்றால் 2031-ல் அ.தி.மு.க, பா.ஜ.க-வை பின்னுக்குத் தள்ளலாம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88