`அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்நாட்டையே மனது சிந்திக்கும் பார்வை கண்காணிக்கும்!' – ஸ்டாலின் கடிதம்

அமெரிக்காவிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். செப்டம்பர் 12-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.

கலைஞர் – ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கேற்ற கொள்கை வகுக்கப்பட்டு, பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளைக் கொண்டு வந்தபடியே இருக்கிறோம். தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலளாகவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாகக் கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 10-லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

ஸ்டாலின்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துகிற வகையில், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை முறையாகக் கண்காணித்து, தொழிற்சாலைகளைத் தொடங்கி, வேலைவாய்ப்பு அமைக்கும் பணியையும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.

சொன்னதைச் செய்வோம் என கலைஞர் உருவாக்கித் தந்த ஆட்சி நிர்வாக இலக்கணத்தின்படி, தொழிற்சாலைகள் அமைப்பதற்கேற்ற சூழல்களை உருவாக்கிக் கொடுத்து, உடனடியாக அடிக்கல் நாட்டு விழாக்களையும், அதன் தொடர்ச்சியாக விரைவாக தொழிற்சாலைத் தொடக்க விழாக்களையும் மேற்கொண்டு வருகிறது திராவிட மாடல் அரசு. கடந்த 21-8-2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும ரூபாய் 17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், ரூபாய் 51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின்

புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை ஏற்கனவே என் தலைமையில் தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில் முனைப்பாக செயல்படுவதுடன், மேலும் பல நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் வகையில், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற அழுத்தமான அடையாளத்தைத் திராவிட மாடல் அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.

திமுக – ஸ்டாலின்

ஆகஸ்ட் 29 அன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன். அதன் பின், செப்டம்பர் 2-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன்.

`ஃபார்ச்சூன் 500′ நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறேன். இவையனைத்தும் அன்னைத் தமிழ்நாடு தொழில்வளம் பெறவும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவுமான முயற்சிகளாகும். தொழில் முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.

ஸ்டாலின்

1971-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருடைய மனசாட்சியான முரசொலி மாறனும் அந்தப் பயணத்தில் உடன் சென்றிருந்தார். அன்றைய சிகாகோ வாழ் தமிழர்களும் அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்களும் தலைவர் கலைஞரின் உரை கேட்டு மகிழ்ந்தனர். அதன்பின், நியூயார்க் நகருக்குச் சென்று அங்கு தமிழ் மன்றத்தைத் தொடங்கி வைத்தார் கலைஞர்.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகளுடன், ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதுவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அமெரிக்கப் பயணத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக தொழில்-முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்கூட்டியே அங்குச் சென்று ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான். இந்தக் குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

கழகத்தின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெறவுள்ள கழகத்தின் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழாவை எழுச்சியுடன் நடத்திடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுடைய ஒருவனான என் ஒரு தோளில், ஆட்சித் தலைமைப் பொறுப்பைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றி வைத்திருக்கிறார்கள். மற்றொரு தோளில், கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றி வைத்திருக்கிறீர்கள். அந்தப் பொறுப்புகளைச் சுமந்தபடியேதான் அமெரிக்காவுக்குப் பறக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், மதிப்பிற்குரிய கழக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். அமைச்சரவைக் கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் ஏற்கெனவே இதனை வலியுறுத்தியிருக்கிறேன்.

ஆட்சிப் பணியும், கழகப் பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம் – சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.

முதல்வர் ஸ்டாலின்

நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும். வார்த்தைகளால் பதில் சொல்லி அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியதில்லை. கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன்.

பணிகளைக் கண்காணிப்பேன். உடன்பிறப்புகளிடம் என் உணர்வுகளைக் கடிதம் வாயிலாகவும் காணொலிகளாகவும் பகிர்ந்து கொள்வேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும். தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *